உலகம்
டியாகோர்கார்சியா தீவில் சிக்குண்ட இலங்கைத் தமிழ் அகதிகளை பிரிட்டனுக்குள் ஏற்கத் திட்டம்!

டியாகோர்கார்சியா தீவில் சிக்குண்ட இலங்கைத் தமிழ் அகதிகளை பிரிட்டனுக்குள் ஏற்கத் திட்டம்!
கனவுபோல் உள்ளதாக அவர்கள் கண்ணீர்
மிக நீண்டகாலமாக, டியாகோர் கார்சியா தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த, இலங்கைத் தமிழ் அகதிகளை பிரிட்டனுக்குள் அனுமதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுமார் 60 இலங்கைத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் கடந்த மூன்று வருடங்களாக டியாகோ கார்சியாவின் தற்காலிக கூடாரங்களில் வசித்து வருகின்றனர். இவர்கள் அங்கு புகலிடக் கோரிக்கைக்குப் பதிவுசெய்துள்ளனர். எனினும், இதற்கு முன்னர் இருந்த கன்சர்வேடிவ் அரசாங்கம் குடியேற்றங்களுக்கு எதிரான கொள்கைகளை இறுக்கி அவர்களைப் பிரிட்டனுக்குள் அனுமதிக்க மறுத்து வந்தது.
தற்போது ஆட்சிப்பீடம் ஏறியுள்ள தொழிலாளர் கட்சி அரசாங்கம், அந்தத் தமிழ் அகதிகளைப் பிரிட்டனுக்குள் அழைக்கத் தீர்மானித்துள்ளது. தொழிலாளர் கட்சியின் தலைவரும், பிரதமருமான கீர் ஸ்டார்மர் மேற்கொண்ட கொள்கை மாற்ற நடைமுறைகளாலேயே, அந்த அகதிகள் பிரிட்டனுக்குள் அழைக்கப்படவுள்ளனர்.
டியாகோ கார்சியா எப்போதும் புலம்பெயர்ந்தவர்களுக்கு நீண்ட காலத்திற்குரிய இடமாக விளங்கியதில்லை. எனவே, அங்குள்ளவர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டியது அவசியம் என்று பிரிட்டன் பிரதமர் அலுவலகத்தின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் அரசாங்கத்தின் இந்த அறிவிப்பை தாம் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என்றும், இது கனவுபோல உள்ளதாகவும் டியாகோ கார்சியாவில் தங்கியுள்ள தமிழ் அகதிகள் சர்வதேச ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர். (ச)