இந்தியா
அதிகாரப் பசி கொண்டவர்களை மக்கள் நிராகரித்துள்ளனர் – பிரதமர் மோடி சாடல்

அதிகாரப் பசி கொண்டவர்களை மக்கள் நிராகரித்துள்ளனர் – பிரதமர் மோடி சாடல்
“மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தவிடுவதில்லை” என பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். மேலும் “ஜனநாயகத்தை மதிக்காதவர்கள்” என்றும் எதிர்க்கட்சிகள் மீது காட்டமாக விமர்ச்சித்துள்ளார்.
2 மாநில தேர்தல் நிறைவு, அதானி விவகாரம் உள்ளிட்ட பரபரப்பான சூழலில் இன்று தொடங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் 20-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தொடரில் வக்ஃப் வாரிய திருத்தச் சட்டம் உட்பட 16 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது.
இந்நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் சற்றுநேரத்தில் தொடங்க உள்ளதை அடுத்து நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், “அரசியலமைப்பின் 75வது ஆண்டு கொண்டாட்டத்தின் போது கூடும் இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமாக நடக்கும் என நம்புகிறேன். ஏனெனில், நாடாளுமன்றத்தில் மக்களுக்காக காங்கிரஸ் எப்போதும் பேசியதில்லை. ஆனால் இடையூறு செய்யும் வகையிலேயே காங்கிரஸ் கட்சி நடந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து அவர் பேசுகையில் ““நாடாளுமன்ற விவாதங்களில் அதிகளவில் எம்.பி.க்கள் பங்கேற்க வேண்டும். ஆரோக்கியமான விவாதங்களை உறுப்பினர்கள் முன்னெடுக்க வேண்டும். அவையில் தொடரும் அமளியால் இளம் எம்.பி.க்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். அதற்கு எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு தேவை” எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
”மேலும், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் அதிகார பசி மட்டுமே கொண்ட கட்சிகளை வாக்காளர்களாகிய மக்கள் நிராகரித்துள்ளார்கள் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடியுள்ளார்.
முன்னதாக, டெல்லியில் அனைத்து கட்சிகளின் நாடாளுமன்ற குழுத் தலைவர்களுடன் நடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த அனைத்துக்கட்சியினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மணிப்பூர் வன்முறை மற்றும் அதானி லஞ்ச விவகாரம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ள நிலையில்,அது குறித்து அலுவல் ஆய்வுக்குழு முடிவு செய்யும் எனவும் கிரண் ரிஜிஜூ கூறினார்.