இலங்கை
சீரற்ற காலநிலை காரணமாக 45 குடும்பங்கள் ஒட்டுசுட்டான் இடைத்தங்கல் முகாமில் தங்கவைப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக 45 குடும்பங்கள் ஒட்டுசுட்டான் இடைத்தங்கல் முகாமில் தங்கவைப்பு!
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பண்டாரவன்னி கிராமத்தில் அதிக வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளமையால் தொடர்ச்சியாக இன்று இரவும் மழை பெய்யும் சாத்தியம் இருப்பதனால் அக்கிராமத்தில் உள்ள மக்களை அயலிலுள்ள பாடசாலைக்கு செல்லுமாறு அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் தகவல் விடுத்துள்ளனர்.
இதனையடுத்து ஒட்டுசுட்டான் பண்டாரவன்னி கிராமத்தை சேர்ந்த 45 குடும்பங்களை சேர்ந்த 137 அங்கத்தவர்கள் கருவேலங்கண்டல் அ.த.க பாடசாலை யில் அமைக்கப்பட்ட இடைத்தங்கல் முகாமில் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் கிடாஅடைஞ்சான் ஆறும் குருவிச்சை ஆறும் குறுக்கறுத்து பாய்வதனால் வெள்ளம் கிராமத்தினை பாதிக்கும் சாத்தியக்கூறுகள் இருப்பதனாலே குறித்த பகுதி மக்கள் பாடசாலையில் அமைக்கப்பட்ட இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதி கிராம சேவையாளர், சமுர்த்தி அலுவலகர் , அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோருடன் இணைந்து பிரதேச செயலக அதிகாரிகள் அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் இராணுவம் பொலிஸார் இணைந்து குறித்த கிராம மக்களை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதும் குறிப்பிடதக்கது. (ச)