இந்தியா
ஃபெங்கல் – ஃபெஞ்ஜல் எது சரி? ஏன் குழப்பம்!

ஃபெங்கல் – ஃபெஞ்ஜல் எது சரி? ஏன் குழப்பம்!
வங்கக் கடலில் கடந்த சில தினங்களாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி வந்தது. இது புயலாக மாற வாய்ப்பு இருப்பதாக தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் நேற்று பிற்பகல் தெரிவித்திருந்தார். ஆனால், நேற்று மாலையே இந்திய வானிலை ஆய்வு மையம் அது புயலாக மாறாது என அறிவித்தது. மேலும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என்றும் தெரிவித்தது.
இந்நிலையில், இன்று பிற்பகல் 2.30 மணிக்கு காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. புயல் உருவானால் அதற்கான பெயரை சூட்டுவதற்கு முன்பே ஒரு பட்டியல் தயார் செய்து வைக்கப்படும். அந்த வகையில், வங்கக் கடலில் இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்திற்கு ஃபெங்கல் எனும் பெயர் சூட்டப்பட இருக்கிறது என தொடர்ந்து செய்திகள் வந்தன.
இறுதியாய் இன்று புயல் உருவாகும் சூழல் சாதகமாக இருந்த சமயத்தில் புயலுக்கு சூட்டப்பட்டுள்ள பெயர் ஃபெங்கல் அல்ல, ஃபெஞ்ஜல் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. மேலும், ஆங்கிலத்தில் (Fengal) என எழுதப்பட்டாலும், அதனை (Fenjal) என்றே உச்சரிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
எப்போதும், வட இந்திய பெருங்கடல், அரபிக் கடல் மற்றும் வங்கக் கடலில் உருவாகும் புயல்களுக்கு உலக வானிலை அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகளின் ஆசியா மற்றும் பசிபிக் குழுவின் உறுப்பினர் நாடுகள் பெயர் சூட்டும்.
ஐக்கிய நாடுகளின் ஆசியா மற்றும் பசிபிக் குழுவின் உறுப்பினர் நாடுகளாக, இந்தியா, ஈரான், வங்கதேசம், மாலதீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், கத்தார், சவுதி அரேபியா, இலங்கை, தாய்லாந்து, ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் ஏமன் ஆகிய நாடுகள் உள்ளன.
இதையும் படியுங்கள் :
Fengal: சென்னையில் 6ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு! என்ன நடக்கும் தெரியுமா?
இந்த நாடுகள் அனைத்தும் தலா 13 பெயர்களை கொடுக்கும். அப்படி பெறப்படும் 169 பெயர்களை, வட இந்திய பெருங்கடல், அரபிக் கடல் மற்றும் வங்கக் கடலில் உருவாகும் புயல்களுக்கு வரிசையாக சூட்டப்படும்.
இதன் அடிப்படையில், தற்போது உருவாகியுள்ள புயலுக்கு சவுதி அரேபியா வழங்கிய ஃபெஞ்ஜல் எனும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.