இந்தியா
Fengal cyclone : சென்னை உள்பட 7 மாவட்டங்களில் 500 மருத்துவ முகாம்கள்! – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

Fengal cyclone : சென்னை உள்பட 7 மாவட்டங்களில் 500 மருத்துவ முகாம்கள்! – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
ஃபெஞ்சல் புயல் காரணமாக, சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் தண்ணீர் தேங்கி, மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில், கனமழை பெய்து வரும் 7 மாவட்டங்களிலும் ஞாயிற்றுக்கிழமை (டிச.1) காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை 500 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
இதன்படி, சென்னையில் 200 முகாம்கள், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 6 மாவட்டங்களில் தலா 50 மருத்துவ முகாம்கள் என 500 முகாம்கள் நடத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த முகாம்களின் எண்ணிக்கையை தேவைக்கு ஏற்ப அதிகரிக்க மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்த முகாம்களில் காய்ச்சல், சளி பரிசோதனை, ரத்தக் கொதிப்பு, சர்க்கரை அளவு போன்ற அடிப்படை பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
காய்ச்சல், சளி மருந்துகள், ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய்க்கான மருந்துகள், உப்பு – சர்க்கரை கரைசல், நிலவேம்பு குடிநீர், சேற்றுப்புண் மருந்து போன்ற அத்தியாவசிய மருந்துகளை தேவைக்கு அதிகமாக கையிருப்பில் வைத்துக்கொள்ள மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த மருத்துவ முகாம்கள் இலவசமாக நடத்தப்படுவதால், பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் சென்று, தங்களது உடல்நிலையை பரிசோதித்துக் கொள்ளலாம். மருந்துகளும் இலவசமாகவே வழங்கப்பட உள்ளன.