இந்தியா
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறையும் புயல் – பாலச்சந்திரன்

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறையும் புயல் – பாலச்சந்திரன்
ஃபெஞ்சல் புயலானது அடுத்த மூன்று மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுகுறையும் என்று இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் இன்று (டிசம்பர் 1) தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட வீடியோவில், “ஃபெஞ்சல் புயல் புதுச்சேரிக்கு அருகில் நேற்று (நவம்பர் 30) மாலை 5.30 மணியளவில் கரையைக் கடக்க தொடங்கி, இரவு 10.30 – 11.30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் கரையைக் கடந்தது. இது தொடர்ந்து புதுச்சேரிக்கு அருகில், நிலைகொண்டுள்ளது.
கடந்த ஆறு மணி நேரத்தில் மணிக்கு சுமார் 7 கி.மீ வேகத்தில் நகர்ந்துள்ளது. கடந்த மூன்று மணி நேரத்தில் நகராமல் உள்ளது. தற்போதைய நிலவரப்படி, புயலானது தொடர்ந்து மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து அடுத்த மூன்று மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறையக்கூடும்.
இதுவரை பதிவான தகவல்களின் அடிப்படையில், கடந்த 24 மணி நேரத்தில் மூன்று இடங்களில் அதிகனமழையும், ஆறு இடங்களில் மிக கனமழையும், 20 இடங்களில் கனமழையும் பெய்துள்ளது.
அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் 50 செ.மீ மழை பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் 46 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இதற்கு முன்பு 2004-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31-ஆம் தேதி புதுச்சேரியில் 21 செ.மீ மழை பெய்தது. அதன்பிறகு தற்போது தான் அதிகனமழை பெய்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
குளிர்கால தும்மல், காய்ச்சல், உடல் வலி… மருத்துவரிடம் செல்ல வேண்டியது அவசியமா?
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய பென்சில்!