இந்தியா
“எங்களுக்கு துப்பாக்கி வேண்டும்” – கோரிக்கை மனு கொடுத்த விவசாயிகள்… ஏன் தெரியுமா?

“எங்களுக்கு துப்பாக்கி வேண்டும்” – கோரிக்கை மனு கொடுத்த விவசாயிகள்… ஏன் தெரியுமா?
திருப்பூர் மாவட்டம் சேமலை கவுண்டர் பாளையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தோட்டத்தில் வசித்து வந்த விவசாயிகளான தெய்வசிகாமணி, அவரது மனைவி அலமேலு மற்றும் அவர்களது மகன் செந்தில்குமார் ஆகியோர் தோட்டத்தில் மர்ம நபர்களால் அடித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.
அண்மையில் பல்லடம் கள்ளக்கிணறு பகுதியில் விவசாய குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்து சில நாட்களில் மீண்டும் இந்த கொடூர கொலை மாவட்ட மக்களிடையேயும், விவசாயிகளையும் கடும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் விவசாயிகள் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டு வருவதாகவும், அவர்களுக்கு துப்பாக்கி வைத்துக் கொள்ள தமிழ்நாடு அரசு அனுமதி வழங்க வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பாக அவிநாசி பாளையம் காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டது.
இது குறித்து பேட்டியளித்த தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி, விவசாயிகளின் தோட்டங்களில் மோட்டார், மின் ஒயர் உள்ளிட்ட உடைமைகளை குறிவைத்து திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், அதை தடுக்க காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.