Connect with us

இந்தியா

புயல் பாதிப்பில் கடலூர், விழுப்புரம்… மீட்பு பணிகளை பட்டியலிட்ட ஸ்டாலின்

Published

on

Loading

புயல் பாதிப்பில் கடலூர், விழுப்புரம்… மீட்பு பணிகளை பட்டியலிட்ட ஸ்டாலின்

விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பார்வையிட்டு நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த துணை முதலமைச்சரை அனுப்பியுள்ளேன். தேவைப்பட்டால் நானும் நேரில் செல்வேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஃபெஞ்சல் புயல் கரையை கடந்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசின் சார்பில் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழிலகத்தில் அமைந்துள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் இன்று (டிசம்பர் 1) நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

Advertisement

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து ஸ்டாலின் பேசுகையில், “வங்கக் கடலில் உருவாகியிருந்த ஃபெஞ்சல் புயல் காரணமாக நேற்று சென்னையில் கனமழை பெய்தது. கனமழை பெய்தாலும் நம்முடைய தமிழ்நாடு அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் காரணமாகவும், தூர்வாரும் பணிகளின் காரணமாகவும், பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் தேங்கவில்லை என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.

வடசென்னை பகுதிகளில் மழைநீரை அகற்றுவதற்கு இராட்சத மின் மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டு மழைநீர் அகற்றப்பட்டிருக்கிறது. தொடர்ந்து சில இடங்களில் அந்தப் பணிகள் நடைபெற்று வருகிறது.

மழைநீர் தேங்கும் இடங்களில் அதனை வெளியேற்றும் வகையில் பல்வேறு திறன் கொண்ட 1,686 மோட்டார் பம்புகள் எப்போதும் தயார் நிலையில் உள்ளன. தேங்கிய இடங்களில் உடனுக்குடன் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

Advertisement

சென்னையில் உள்ள 22 சுரங்கப் பாதைகளில் 21-ல் போக்குவரத்து சீராக உள்ளது. கணேசபுரம் சுரங்கப் பாதை ரயில்வே மேம்பாலப் பணி காரணமாக போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 32 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, அதில் 1018 நபர்கள் தங்கவைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு இன்று வரை 9 இலட்சத்து 10 ஆயிரம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. நேற்றைய தினம் அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்க வேண்டும் என்று நான் அறிவித்திருந்தேன். அந்த அடிப்படையில், 386 அம்மா உணவகங்களில் 107,047 பேருக்கு உணவு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

வடகிழக்குப் பருவ மழையினை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சியில் அலுவலர்கள், பொறியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் என மொத்தம் 22 ஆயிரம் பேர் மழைக்கால மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் பணிகளை 2,119 களப்பணியாளர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். எதையும் எதிர்கொண்டு சமாளிக்கும் வகையில் சென்னை தயார் நிலையில் உள்ளது.

உண்மையாகவே நேற்றிலிருந்து எந்த மின்தடையும் இல்லை. மாநகராட்சி மற்றும் அனைத்து துறைகளும் நன்கு வேலை பார்த்துள்ளார்கள். அவர்களுக்கு எனது பாராட்டுகள்.

அதைத் தொடர்ந்து இன்று காலை கொளத்தூர் தொகுதிக்கு நான் சென்றிருந்தேன். கடந்த காலங்களில் தண்ணீர் நிற்கும் பகுதிகளில் எங்கும் இப்போது தண்ணீர் தேங்கவில்லை. இதை மக்களே மகிழ்ச்சியாக தெரிவித்தார்கள்.

Advertisement

மாநிலத்தின் மற்ற மாவட்டங்களின் நிலையை நேற்று முதல் இன்று வரை தலைமைச் செயலாளர் மூலமும் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்களிடம் தொலைபேசி மூலம் அறிந்து வருகிறேன்.

அந்த வகையில், விழுப்புரம் மாவட்டத்தைப் பொறுத்தவரையில், வரலாறு காணாத மழை அங்கு பதிவாகி உள்ளது. அங்கு நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.

குறிப்பாக, கடந்த 24 மணி நேரத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் மயிலத்தில் 49 செ.மீ. மழையும், நெம்மேலியில் 46 செ.மீ. மழையும். வானூரில் 41 செ.மீட்டர் என பல பகுதிகளில் அதிகனமழை பதிவாகி உள்ளது.

Advertisement

மேலும், விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பார்வையிட்டு நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினையும் நான் அனுப்பி வைத்துள்ளேன். தேவைப்பட்டால் நானும் நேரில் செல்வேன்.

விழுப்புரம் மாவட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த மாவட்ட அமைச்சரான பொன்முடி, போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், மின்சாரம். மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி ஆகியோரை அனுப்பி வைத்துள்ளேன்.

மேலும், விழுப்புரம் மாலட்டத்தில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கி, பணிகளை துரிதப்படுத்த நீர்வள ஆதாரத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன் தலைமையில், இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் ஆல்பி ஜான் வர்கீஸ், கிரன் குராலா, பொன்னையா, சிவராசு ஆகியோரை அனுப்பி வைத்துள்ளோம். ஏற்கனவே மாவட்ட கண்காணிப்பு அலுவலர் S.J. சுன்சோங்கம் ஐடக் சிரு மூன்று நாட்களாக விழுப்புரத்தில் முகாமிட்டு கண்காணித்து வருகிறார்.

Advertisement

விழுப்புரம் மாவட்டத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையைச் சார்ந்த 12 குழுக்கள் விரைந்துள்ளன.

விழுப்புரம் மாவட்டத்தில் துப்புரவு பணிகளை மேற்கொள்ள பிற மாவட்டங்களிலிருந்து துய்மைப் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு, அவர்களும் அதில் ஈடுபட உள்ளார்கள்.

கடலூர் மாவட்டத்தில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் சி.வி.கணேசன் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்கள்.

Advertisement

கடலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் இரண்டு மாவட்ட வருவாய் அலுவலர்களை அனுப்பி வைத்துள்ளேன்.

இன்று நிலவரப்படி விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் 26 முகாம்களில் 1,373 நபர்கள் தங்கவைக்கப்பட் டுள்ளனர். விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதோடு, மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த புயலின் காரணமாக தமிழ்நாட்டில் குறிப்பாக, கடலூர். விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீரமைக்கவும், பாதிப்புக்குள்ளான மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் தேவையான நிதி வழங்கிடவும், பாதிப்புகளை பார்வையிட மத்திய குழுவை அனுப்பி வைக்க ஒன்றிய அரசை கேட்டுக்கொள்ள இருக்கிறோம்.

Advertisement

இன்று திருவண்ணாமலை மாவட்டங்களிலும் அதிக மற்றும் கள்ளக்குறிச்சி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அந்த மாவட்ட அலுவலர்களையும் தயார் நிலையில் இருக்க தெரிவித்துக்கொள்கின்றேன்.

மழை இன்னும் பல மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து கொண்டு வருகிறது. முழுமையாக நிற்கவில்லை. ஓரளவு மழை குறைந்த பின்பு தான் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். அதே போல் பயிர் சேதத்தைப் பொறுத்தவரையில் மழைநீர் வடிந்ததை முறையாக கணக்கெடுப்பு செய்து, இழப்பீடு தொகை எப்படி வழங்க வேண்டும் என்பதை பிறகு தான் செய்ய முடியும்.

நாளைய தினம் தலைமைச்செயலகத்தில், சம்மந்தப்பட்ட அலுவலர்களுடன் கூட்டம் நடத்த இருக்கிறோம். அதில் கலந்தாலோசித்து முடிவு எடுத்து, அதற்குப் பிறகு ஒன்றிய அரசிக்கு இது குறித்து விளக்கமாக கடிதம் மூலம் தெரிவிப்போம்.” என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன