Connect with us

இந்தியா

புயல் பாதிப்பு… நிவாரணம் வழங்கப்படுமா? : ஸ்டாலின் பதில்!

Published

on

Loading

புயல் பாதிப்பு… நிவாரணம் வழங்கப்படுமா? : ஸ்டாலின் பதில்!

‘பெஞ்சல்’ புயலால் சேதம் அடைந்த விவசாயிகள் மற்றும் மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்துள்ளது.

Advertisement

இந்த நிலையில் விழுப்புரத்தில் இன்று (டிசம்பர் 2) வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

அதன்பின்னர் விழுப்புரம் கிழக்கு, வி.வி.ஏ. மஹாலில் செய்தியாளர்களை சந்தித்து அவர் அளித்த பேட்டியில், ”ஃபெஞ்சல் புயலின் காரணமாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர் ஆகிய மாவட்டங்கள் இதுவரை கண்டிராத மழையை சந்தித்துள்ளது.

கடந்த இரண்டு தினங்களாக மழை தொடர்ந்து பெய்து கொண்டு வருகிறது. இவையல்லாமல், மற்ற மாவட்டங்களிலும் மழையின் அளவு வழக்கத்தை விட அதிகமாக பதிவாகி உள்ளது.

Advertisement

இந்தப் புயல் தொடங்குவதற்கு முன்பாகவே அரசின் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதற்காக பல்வேறு ஆய்வுக் கூட்டங்களை தொடர்ந்து நடத்தி உரிய நடவடிக்கையை முன்கூட்டியே மேற்கொண்டிருக்கிறோம் என்பது உங்களுக்கெல்லாம் நன்றாக தெரியும்.

அதேபோல,அமைச்சர்கள் மற்றும் கண்காணிப்பு அலுவலர்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், பாதுகாப்பு மற்றும் மீட்பு மேற்கொள்வதற்காக மீட்புப் பணிக் குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக, விழுப்புரம் மாவட்டத்திற்கு, சுமார் 407 வீரர்களை உள்ளடக்கிய 7 தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுக்களும், 8 மாநில பேரிடர் மேலாண்மைக் குழுக்களும், என மொத்தம் 15 குழுக்களும், கடலூர் மாவட்டத்திற்கு 56 வீரர்களைக் கொண்ட 2 குழுக்களும், திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 30 வீரர்களைக் கொண்ட ஒரு குழுவும், ஆக மொத்தம் மூன்று மாவட்டங்களுக்கும் 493 மீட்புக் குழு வீரர்கள், 18 குழுக்களாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

மீட்புப் பணிக் குழுவினருடன், மாநிலத்தின் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறையைச் சேர்ந்த வீரர்களும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக, விழுப்புரம் மாவட்டத்தில் 180. கடலூர் மாவட்டத்தில் 247 மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் 210 என மொத்தம் 637 தீயணைப்புத் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

புயல், மழையிலிருந்து பாதுகாப்பாக பொது மக்களைத் தங்க வைக்க தற்போது 174 நிவாரண மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் 7 ஆயிரத்து 876 நபர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவையான குடிநீர் வசதி, உணவு, மருத்துவ வசதிகள் தொடர்ந்து செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது.

விழுப்புரம் மாவட்டம் பெரும் பாதிப்படைந்து மின்சாரம் இன்றி பல பகுதிகள், பல கிராமங்கள், பேரூராட்சிகள் சிக்கல்களை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதையும் சரி செய்வதற்கான 900 நபர்கள் அந்தப் பணியில் இன்றைக்கு மின்வாரியத் துறையின் சார்பாக ஈடுபட்டிருக்கிறார்கள். தண்ணீர் தேங்கியிருக்கும் இடங்களில் எல்லாம் உடனடியாக மின்சாரம் தர முடியாத சூழ்நிலை இருக்கிறது. தண்ணீர் வடிந்த பகுதிகளில் எல்லாம் உடனுக்குடன் மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது.

Advertisement

தற்போது மழையின் அளவு கடலோர மாவட்டங்களில் குறைந்திருந்தாலும், உள்மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக, திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மூத்த ஐஏஎஸ் அதிகாரி அன்சூல் மிஸ்ரா தலைமையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் தீவிரப்படுத்த ஒரு சிறப்புக் குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பயிர் சேதங்களைப் பொறுத்தவரையில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் நெற்பயிர்கள் மூழ்கியிருக்கிறது.

தற்போதைய உத்தேசமான கணக்கெடுப்பின்படி, 1,29,000 ஹெக்டேர் பரப்பளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக புள்ளிவிவரம் பெறப்பட்டுள்ளது. மழை முழுவதுமாக நின்ற பிறகு, தேங்கியுள்ள நீர் வடிந்தபின், முறையான, முழுமையான கணக்கெடுப்பு நடத்தி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் நிச்சயமாக வழங்கப்படும்.

Advertisement

அதேபோல் நிவாரணப் பணியில் ஈடுபட்டிருக்கக்கூடிய நம்முடைய களப் பணியாளர்கள் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வரவழைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் புயலின் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், சேதமடைந்த வீடுகள் மற்றும் கால்நடைகளுக்கும் உரிய நிவாரணமும் வழங்கப்படும்

நான் ஏற்கெனவே தெரிவித்தபடி, ஃபெஞ்சல் புயலின் காரணமாக தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள சேதங்கள் தொடர்பான அறிக்கை ஒன்றினை விரைவில் ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைத்து, சேதங்களைப் பார்வையிட உடனடியாக குழுவினை அனுப்பி வைப்பதற்கான அந்தக் கோரிக்கையையும் நிச்சயமாக தமிழ்நாடு அரசின் சார்பில் நாங்கள் வைக்க இருக்கிறோம். நாடாளுமன்றத்தில் இன்றைக்கு திமுக எம்பிக்களை புயல் பாதிப்பு பற்றி பேசவிடவில்லை.

Advertisement

எவ்வளவு சேதாரம் ஏற்பட்டிருக்கிறது; மக்கள் எந்தளவிற்கு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். விவசாயத்தைப் பொறுத்தவரையில் எப்படிப்பட்ட பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இவற்றையெல்லாம் கணக்கெடுத்து அனுப்புவது எங்களுடைய கடமை. அதைச் செய்வது அவர்களுடைய கடமை. அந்த நம்பிக்கையோடுதான் அனுப்புகிறோம். ஆனால் அதை செய்ய ஒவ்வொரு முறையும் மறுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இருந்தாலும், அதையும் மீறி நாங்கள் செய்து கொண்டுதான் இருக்கிறோம். ஒன்றிய அரசு நிதி ஒதுக்காவிட்டால் அதையும் சமாளிப்போம்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு குற்றம் சொல்வதுதான் அவருடைய கடமை. அதைப்பற்றி நாங்கள் என்றைக்கும் கவலைப்பட்டது கிடையாது. இருந்தாலும் நான் சொல்கிறேன். மக்களுக்கு தெளிவாக தெரியும். எந்த ஆட்சியில் மக்களுக்குரிய பணிகள் எல்லாம் சிறப்பாக நடைபெற்று வருகிறது என்று நன்றாக தெரியும்.

திருவண்ணமலையில் மண் சரிவு காரணமாக 3 வீட்டில் ஏழு பேர் சிக்கியிருப்பதாக தகவல் வந்திருக்கிறது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அமைச்சர் எ.வ.வேலு மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பேசிக் கொண்டுதான் வருகிறேன். ஐஐடி-லிருந்து சில பொறியாளர்களை வரவழைத்து அதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது. தீவிரமாக மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்” என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன