இந்தியா
வரலாறு காணாத கனமழையால் பெருக்கெடுத்த வெள்ளம்.. தனித்தீவாக மாறிய ஊத்தங்கரை!

வரலாறு காணாத கனமழையால் பெருக்கெடுத்த வெள்ளம்.. தனித்தீவாக மாறிய ஊத்தங்கரை!
ஃபெஞ்சல் புயல் தாக்கத்தால் கிருஷ்ணகிரியில் 14 மணி நேரமாக இடைவிடாமல் கனமழை கொட்டியது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் வரலாறு காணாத மழையால் முக்கிய சாலைகள், குடியிருப்பு பகுதிகள் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன. ஊத்தங்கரை சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள அனைத்து நீர் நிலைகளும் முழுமையாக நிரம்பி கரை புரண்டு ஓடி வரும் நிலையில், காமராஜ் நகர், அண்ணா நகர் பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. அண்ணா நகர் பகுதியில் 150-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்த நிலையில், மழை பாதிப்புகளைப் பார்வையிட வந்த மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் அருகே உள்ள அரசுப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில், ஊத்தங்கரையில் வீடுகளில் புகுந்த மழை நீரை அகற்றக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி – திருவண்ணாமலை சாலையில் இருசக்கர வாகனங்களை நிறுத்தி வைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
இதற்கிடையே, ஊத்தங்கரை பேருந்து நிலையம் அருகே உள்ள ஏரி முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் திருப்பத்தூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், அந்தச் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
#JUSTIN கனமழையால் ஊத்தங்கரையில் நீர் நிலைகள் நிரம்பி சாலைகளில் வெள்ளப்பெருக்கு#Krishnagiri #Uthangarai #HeavyRain #Flood #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/Dtt07jjJFx
கிருஷ்ணகிரி – ஊத்தங்கரை சாலையும் துண்டிக்கப்பட்டுள்ளதால் ஊத்தங்கரை பகுதி முழுவதும் தனித்தீவாக மாறியது. திருப்பத்தூர் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏராளமான வாகனங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அந்த வாகனங்கள் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் மீட்கப்பட்டன.