இந்தியா
School Leave : பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிசம்பர் 03) விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

School Leave : பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிசம்பர் 03) விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
வங்கக் கடலில் உருவாகிய ‘ஃபெஞ்சல்’ புயலின் காரணமாக தமிழ்நாட்டின் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் அதி கன மழை பொழிந்தது. இதன் காரணமாக மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. சில இடங்களில் ஏரியும் ஆறும் நிரம்பி உபரி நீர் வெளியேறியதால் குடியிருப்பு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது.
அந்தவகையில், கடலூர் குண்டு உப்பளவாடி பகுதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் உடைப்பு ஏற்பட்டதால் ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. குடியிருப்பு பகுதியில் இடுப்பளவுக்கு தண்ணீர் ஆர்ப்பரித்து சென்ற நிலையில், அப்பகுதி மக்கள் வீடுகளை காலி செய்துவிட்டு பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர். தகவலறிந்து வந்த மீட்புக் குழுவினர் பொதுமக்கள் மற்றும் செல்லப்பிராணிகளை பாதுகாப்பாக மீட்டனர்.
அதேபோல், கடலூர் மாவட்டம் கண்டங்காடு கிராமத்தை தென்பெண்ணை ஆற்று நீர் சூழ்ந்ததால் தனித்தீவு போல மாறியது. அந்த பகுதியில் இடுப்பளவுக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தகவலறிந்து வந்த மீட்புக் குழுவினர் டிராக்டர் மூலம் பொதுமக்களை மீட்க நடவடிக்கை எடுத்தனர்.
‘ஃபெஞ்சல்’ புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கடலூரும் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. குறிப்பாக தென்பெண்ணை ஆற்று நீரால் கடும் சேதத்தை அந்த மாவட்டம் சந்தித்துள்ளது.
இந்நிலையில், தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை (03.12.2024) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.