உலகம்
லெபனானில் இஸ்ரேலிய படை 52 தடவை போர்நிறுத்த மீறல்: தொடர்ந்து தாக்குதல்!

லெபனானில் இஸ்ரேலிய படை 52 தடவை போர்நிறுத்த மீறல்: தொடர்ந்து தாக்குதல்!
லெபனானில் இஸ்ரேல் போர் நிறுத்த மீறல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டப்படும் அதேநேரம் காசாவில் தொடரும் தாக்குதல்களில மேலும் பல பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் எட்டப்பட்ட ஹிஸ்புல்லாவுடனான போர் நிறுத்தத்தை இஸ்ரேல் 52 தடவைகள் மீறி இருப்பதாக பிரான்ஸ் குற்றம்சாட்டியுள்ளது. இதில் கடந்த சனிக்கிழமை மூன்று லெபனான் நாட்டவர்கள் கொல்லப்பட்ட தாக்குதலும் அடங்குவதாக இஸ்ரேலின் யினெட் நியூஸ் செய்தித் தளம் குறிப்பிட்டுள்ளது.
எனினும் தனது நடவடிக்கைகளை நியாயப்படுத்தும் இஸ்ரேல் இராணுவம் ஹிஸ்புல்லாவின் மீறல்களுக்கே பதிலடி கொடுப்பதாக தெரிவித்துள்ளது. எனினும் இந்த போர் நிறுத்த உடன்படிக்கையை கண்காணிக்கும் சர்வதேச குழுவின் ஆலோசனை இன்றி இஸ்ரேல் தனியாக இயங்குவதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான செயற்பாடுகள் பலவீனமான போர் நிறுத்தத்தை முறிக்கக் கூடும் என்று பிரான்ஸ் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இதேவேளை தெற்கு லெபனானில் அமைந்துள்ள நக்கூரா சிறு நகரில் இஸ்ரேலிய படையினர் இயந்திர துப்பாக்கிகளை பயன்படுத்தி வீடுகள் மீது சூடு நடத்தியதாக லெபனான் தேசிய செய்தி நிறுவனம் நேற்றுத் தெரிவித்தது.
தெற்கு லெபனானில் இடம்பெயர்ந்த மக்கள் தமது வீடுகளுக்கு திரும்புவதற்கு எதிராக இஸ்ரேல் இராணுவம் மீண்டும் ஒருமுறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
‘ஷெபா, அல் ஹப்பரி, மர்ஜயங், அர்னூன்;, யோமோர், கண்டரா, சக்ரா, பராசிட், கட்டர், அல் மன்சூர் ஆகிய கிராமங்கள் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிக்கு நகர்வது இருந்து மறு அறிவித்தல் வரை தடுக்கப்பட்டுள்ளது என்பதை மீண்டும் ஒருமுறை நினைவூட்டுகிறேன்;’ என்று இஸ்ரேல் இராணுவ பேச்சாளர் அவிசே அட்ராயி, எக்ஸ் சமூகதளத்தில் லெபனான் மக்களை எச்சரித்துள்ளார்.
‘இந்தக் கோடுகளின் தெற்காக யாரேனும் நகர்ந்தால் தம்மை ஆபத்துக்கு உட்படுத்துவதாக இருக்கும்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதில் மக்கள் தமது வீடுகளுக்கு திரும்புவது தடுக்கப்பட்ட 60 கிராமங்களின் பட்டியலையும் இஸ்ரேல் இராணுவ பேச்சாளர் வெளியிட்டுள்ளார்.
ஹிஸ்புல்லா மற்றும் லெபனான் இடையே செய்துகொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையின்படி 60 நாட்களுக்குள் இஸ்ரேலியப் படைகள் லெபனானில் இருந்து வாபஸ் பெறப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
மறுபுறம் காசாவில் சரமாரித் தாக்குதல்கள் தொடரும் நிலையில் வடக்கு காசாவின் பெயித் லஹியாவில் வீடு ஒன்றின் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை (01) இடம்பெற்ற தாக்குதலில் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. வடக்கு காசாவில் இருந்து இஸ்ரேலால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு வரும் பலஸ்தீனர்களின் பெரும்பாலானவர்கள் பெயித் லஹியாவிலேயே அடைக்கலம் பெற்று வருகின்றனர். இங்கு லப்பத் குடும்பத்திற்கு சொந்தமான வீட்டின் மீதே இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியதாக பலஸ்தீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மத்திய காசாவின் டெயிர் அல் பலாஹில் இஸ்ரேல் நடத்திய பீரங்கி தாக்குதல்களில் நேற்று பலஸ்தீன இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இந்த கடுமையான செல் தாக்குதலில் 25 வயது ஹசன் அல் மஸ்தர் என்பவரே கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா தெரிவித்தது.
முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 47 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு மேலும் 108 பேர் காயமடைந்ததாக காசா சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
காசாவில் ஓர் ஆண்டுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 44,500ஐ நெருங்கி இருப்பதோடு 105,000க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். காசா போரை ஒட்டி ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையிலும் பதற்றம் நீடிப்பதோடு கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இஸ்ரேலிய நடவடிக்கை ஒன்றில் நான்கு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். ஜெனின் நகருக்கு அருகில் இருக்கும் சிர் கிராமத்திலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனை இஸ்ரேல் இராணுவம் உறுதி செய்யததோடு கொல்லப்பட்டவர்கள் ‘பயங்கரவாதிகள்’ என்று தெரிவித்துள்ளது.
இதனிடையே காசா மற்றும் எகிப்துக்கு இடையிலான ரபா எல்லைக் கடவையை திறப்பது தொடர்பில் பலஸ்தீன போட்டி அமைப்புகளான பத்தா மற்றும் ஹமாஸ் பிரதிநிதிகள் எகிப்து தலைவர்கள் கெய்ரோவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இந்த எல்லைக்கடவையின் காசா பகுதியை கடந்த மே ஆரம்பத்தில் இஸ்ரேல் ஆக்கிரமித்ததை அடுத்து எகிப்து தனது பக்க எல்லைக் கடவையை மூடியமை குறிப்பிடத்தக்கது. மறுபுறம் இஸ்ரேல் மற்றும் காசாவுக்கு இடையிலான கரம் அபூ சலம் எல்லைக்கடவை ஊடாக காசாவுக்கு உதவிப் பொருட்களை எடுத்துச் செல்வதை பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிறுவனம் நிறுத்தியுள்ளது. உதவி வாகனங்கள் மீது இடம்பெற்ற தாக்குதல்களை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் முற்றுகையில் உள்ள காசாவில் உணவு, நீர் மற்றும் மருந்துகள் உட்பட அத்தியாவசிய பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதோடு அங்கு பஞ்சம் ஒன்றுக்கான அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது.