இந்தியா
Cyclone | ஒரு வாரத்தில் மீண்டும் புயல்… தீயாய் பரவும் தகவல் – வானிலை மையம் கொடுத்த விளக்கம்!

Cyclone | ஒரு வாரத்தில் மீண்டும் புயல்… தீயாய் பரவும் தகவல் – வானிலை மையம் கொடுத்த விளக்கம்!
புயல்
வங்கக்கடலில் உருவான, ‘பெஞ்சல்’ புயல் புதுச்சேரி அருகே நவம்பர் 30-ம் தேதி இரவில் கரையை கடந்தது. இதனால், புதுச்சேரி, விழுப்புரம், கிருஷ்ணகிரி, கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன. இந்நிலையில், அடுத்த ஒரு வாரத்துக்குள் வங்கக்கடலில் புதிய புயல் உருவாகும் என்றும், அதன் காரணமாக மிக கடுமையான மழைப்பொழிவு இருக்கும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர்கள் கூறியதாக, சில தகவல்கள் இணையதளங்களில் பரவி வருகின்றன.
இந்நிலையில், உடனடியாக புதிய புயல் உருவாக வாய்ப்பு இல்லை என, வானிலை ஆய்வு மைய வட்டாரங்கள் தெரிவித்தன. இதைத்தொடர்ந்து அடுத்த ஏழு நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு அறிக்கையையும், அந்த மையம் வெளியிட்டுள்ளது. அதில், டிச., 8 வரை புதிய புயல் உருவாவது தொடர்பான எந்த தகவலும் இடம் பெறவில்லை. மிதமான மழைக்கு மட்டுமே வாய்ப்பு என்று கூறப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
நேற்று (02-12-2024) காலை வடதமிழக உள் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மாலை காற்றழுத்த தாழ்வு பகுதியாக வடதமிழக மற்றும் தெற்கு கர்நாடக உள் பகுதிகளில் நிலவியது. இது இன்று (03-12-2024) காலை கடலோர கர்நாடக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது.
03-12-2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி பெரம்பலூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
04-12-2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
05-12-2024 முதல் 09-12-2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.” எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.