இந்தியா
கொடநாடு வழக்கில் திடீர் திருப்பம்.. பத்திரிகையாளருக்கு உயர்நீதிமன்றம் ஆணை

கொடநாடு வழக்கில் திடீர் திருப்பம்.. பத்திரிகையாளருக்கு உயர்நீதிமன்றம் ஆணை
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட டெல்லியைச் சேர்ந்த பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோருக்கு எதிராக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி, 2019ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் மேத்யூ சாமுவேல் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த பதில் மனுவில், தவறான கருத்துகளை கூறியிருப்பதாகவும், அதனை நீக்க வேண்டுமெனவும் எடப்பாடி பழனிசாமி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், குற்ற வழக்கில் முதல் தகவல் அறிக்கையிலும், புலன் விசாரணையிலும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எந்த கருத்தும் தெரிவிக்கப்படாத நிலையில், உள்நோக்கத்துடன் மேத்யூ சாமுவேல் வீடியோ வெளியிட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், இந்த வழக்கில் மேத்யூ சாமுவேல் தாக்கல் செய்த பதில் மனுவில் தேவையில்லாத விஷயங்களை தெரிவித்துள்ளதாகவும் அது மேலும் அவதூறு ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதையடுத்து, பதில் மனுவை பரிசீலித்த நீதிபதி, பதில் மனுவில் கூறியுள்ள தேவையற்ற கருத்துகளை நீக்கி புதிய மனுவை தாக்கல் செய்யலாம் எனத் தெரிவித்தார்.
பின்னர், பதில் மனுவில் கூறியுள்ள தேவையற்ற கருத்துகளை திரும்பப் பெறுவது தொடர்பாக மேத்யூ சாமுவேல் கருத்தை பெற்று தெரிவிக்கும்படி உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை டிசம்பர் 12 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.