இந்தியா
டிச. 5ல் முதல்வர் பதவி ஏற்பு! திடீரென மருத்துவமனையில் ஷிண்டே அனுமதி.. மகாராஷ்டிராவில் பரபரப்பு

டிச. 5ல் முதல்வர் பதவி ஏற்பு! திடீரென மருத்துவமனையில் ஷிண்டே அனுமதி.. மகாராஷ்டிராவில் பரபரப்பு
மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்து பாஜக கூட்டணியான மகாயுதி கூட்டணி அபார வெற்றியை பெற்றுள்ளது. இதனையடுத்து ஷிண்டே சிவசேனாவின் தலைவரும் முதல்வருமான ஏக்நாத் ஷிண்டே ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.
இதனை பெற்றுக்கொண்ட மகாராஷ்டிரா மாநில ஆளுநர் புதிய அரசு அமையும் வரை முதல்வராக தொடர ஏக்நாத் ஷிண்டேவிடம் கேட்டுக்கொண்டார். அதனை ஏற்ற ஏக்நாத் ஷிண்டே தற்போது மகாராஷ்டிராவின் காபந்து முதல்வராக செயல்பட்டுவருகிறார்.
இதற்கிடையில், கடந்த வாரம் மகாயுதி கூட்டணி தலைவர்கள், ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர ஃபட்னாவிஸ், அஜித் பவார் ஆகியோர் உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோரைச் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை முடிவில், தேவேந்திர ஃபட்னாவிஸ் மகாராஷ்டிரா முதல்வராக தேர்வு செய்யப்படுவார் என தகவல் வெளியானது. அதேபோல், ஏக்நாத் ஷிண்டேவும், “முதல்வர் நியமனத்தில் இடையூறாக இருக்க மாட்டேன். பிரதமர் என்ன முடிவு செய்கிறாரோ அதற்கு கட்டுப்படுவேன்” என்று தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பை முடித்து மகாராஷ்டிரா திரும்பிய ஷிண்டே, நேராக தனது சொந்த கிராமமான சதாரா மாவட்டத்திற்கு சென்றார். அங்கிருந்து அவர் கடந்த 1ம் தேதி மும்பை திரும்பினார்.
இதேசமயம், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மேற்பார்வையில் மகாராஷ்டிரா பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தின் முடிவில் தேவேந்திர ஃபட்னாவிஸ் பாஜக சட்டமன்றத் தலைவராகவும் முதல்வராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மறுபுறம் டிசம்பர் 5ம் தேதி மகாராஷ்டிராவில் புதிய அரசு பதவி ஏற்புக்கான ஏற்பாடுகள் மும்பையில் உள்ள அசாத் மைதானத்தில் நடந்துவருகிறது.
இந்நிலையில், ஏக்நாத் ஷிண்டே இன்று மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஒருவாரமாக காய்ச்சல் மற்றும் தொண்டை தொற்றின் காரணமாக அவரின் உடல் நிலை சற்று பாதிப்புக்குள்ளாகி இருந்தது. இதனை அடுத்து இன்று திடீரென அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு முழு உடல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்திருப்பதாக தகவலும் வெளியாகியுள்ளது.
புதிய அரசு அமைய ஏற்பாடுகள் நடந்துவரும் நிலையில், ஏக்நாத் ஷிண்டே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.