இந்தியா
“விஜய்க்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதே அதற்கு பாராட்டு” – சீமான்

“விஜய்க்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதே அதற்கு பாராட்டு” – சீமான்
ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டின் வடகடலோர மாவட்டங்கள் கடும் சேதத்தைச் சந்தித்தது. இதில், சென்னையில் சில பகுதிகளிலும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.
குறிப்பாக சென்னை, டி.பி.சத்திரம் பகுதி மழையால் பாதிப்பைச் சந்தித்தது. இந்தப் பகுதியைச் சேர்ந்த சுமார் 300 குடும்பங்கள் இந்த மழையால் பாதிப்பு அடைந்தன.
தவெக தலைவர் விஜய், டி.பி.சத்திரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை தனது கட்சி அலுவலகமான பனையூர் அலுவலகத்திற்கு நேற்று வரவழைத்து நிவாரணம் வழங்கினார்.
டி.பி.சத்திரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் இருந்து ஒருவர் என மொத்தம் 250க்கும் மேற்பட்டோரை பனையூர் அலுவலகத்திற்கு வரவழைத்த தவெக தலைவர் விஜய், அவர்களிடம் சில நிமிடங்கள் பேசிவிட்டு, அவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து நிவாரணம் வாங்கிவிட்டு வெளியே வந்தவர்களிடம் பேசியபோது, “பாதிக்கப்பட்ட பகுதிக்கு நேரில் வந்து நிவாரணம் வழங்கியிருக்கலாம். ஆனால், அப்படி வந்தால் உங்கள் குறைகளையோ, பிரச்சனைகளையோ கேட்டு அறிந்திருக்க முடியாது. இவ்வளவு சகஜமாக அமர்ந்து பேச முடியாது. அதன் காரணமாக உங்களை இங்கு வரவழைத்து நிவாரணம் வழங்குகிறேன்” என்று விஜய் தெரிவித்ததாக கூறினார்கள்.
அதேசமயம், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்காமல், கட்சி அலுவலகத்திற்கு வரவழைத்து நிவாரணம் வழங்குவதா என சமூக வலைதளங்களில் விமர்சனங்களும் எழுந்தன.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் இது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “நான் 7 மற்றும் 8ம் தேதிகளில் களத்திற்கு செல்ல இருக்கிறேன். விஜய் களத்தில் செல்வதில் சிக்கல் இருக்கிறது. அவர் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க சென்றால், அவரை காண்பதற்கு அதிகமாக கூட்டம் கூடும்.
இதனால் ஒரு பிரச்சனை வரும், பின்னர் அந்த பிரச்சனையையும் அவர் சமாளிக்க வேண்டும். கூட்டம் கூடி பிரச்சனையானால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை என அதற்கு ஒரு விமர்சனம் வரும்.
உதவ வேண்டும் என்ற எண்ணத்தோடு அவர் நேரில் வரவழைத்தாவது நிவாரணம் கொடுத்திருக்கிறாரே அதற்காக அவரை பாராட்ட வேண்டும்” என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய சீமான், “ஆசிரியர், வழக்கறிஞர் கொலை என சட்டம் ஒழுங்கு உள்ளது. சீமானை கண்காணிக்கிறார்கள். ஆனால் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற முடியவில்லை. அரசு நடவடிக்கை மழை வெள்ளத்தில் மூழ்கி விட்டது. அரசு கட்டிய மேம்பாலம் இடிந்தது என்றால் அந்த தரத்தில் தான் ஆட்சி உள்ளது. சரியான நேரத்தில் காரண காரியங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேறு அடித்தால் துடைச்சா போயிடும். அவங்க மேல் ஏற்பட்ட தீமையை யார் துடைப்பது. காலடிக்கு கீழ் மிதி படுவதால் மண்ணின் அருமை தெரியவில்லை. உதயநிதி பிறந்த நாள் கொண்டாடுவதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்” என்று கேள்வி எழுப்பினார்.
முன்னதாக தவெக மாநாடு முடிந்ததில் இருந்து விஜயை, சீமான் கடுமையாக விமர்சித்து வந்தார். இந்நிலையில், தற்போது விஜயை பாராட்டி இருப்பது பெரிதும் கவனிக்கப்படுகிறது.