இந்தியா
ஃபெஞ்சல் புயல் பாதிப்பு; ரூ. 994 கோடியை விடுவிக்க மத்திய அரசு ஒப்புதல்

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு; ரூ. 994 கோடியை விடுவிக்க மத்திய அரசு ஒப்புதல்
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயலால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்ததால் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. அந்த மாவட்டங்களில் தமிழக அரசு சார்பாக நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்றது.
இந்த நிலையில் ஃபெஞ்சல் புயலால் தமிழகத்தில் வரலாறு காணாத சேதம் ஏற்பட்டதாகக் கூறி மத்திய அரசு சார்பில் 2000 கோடி நிவாரண தொகையை உடனடியாக அளிக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். மேலும், பாதிப்புகள் குறித்து தகவல்களை சேகரிக்க மத்திய அரசின் குழுவையும் தமிழகத்திற்கு அனுப்ப வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார். இதைத் தொடர்ந்து, புயல் பாதிப்புகள் குறித்து தொலைபேசி வாயிலாக ஸ்டாலினிடம் மோடி கேட்டறிந்தார்.
புயல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய அரசு குழுவினர் இன்று தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர். மத்திய உள்துறை இணைச்செயலர் ராஜேஷ் குப்தா தலைமையிலான இக்குழுவில், பொன்னுசாமி, சோனமணி ஹேபம், சரவணன், தனபாலன் குமரன், ராகுல் பச்கேட்டி மற்றும் பாலாஜி ஆகிய அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் மத்திய குழுவினர் ஒன்றன்பின் ஒன்றாக டெல்லி ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்து கொண்டு இருக்கின்றனர். இதில் இடம்பெற்றுள்ள பொன்னுசாமி, சோனமணி ஹேபம் ஆகியோர் சென்னை விமான நிலையம் வந்தனர். அவர்களுக்கு தமிழக அரசு சார்பில் சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். மேலும் சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி வாகனம் மூலம் சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியான லீலா பேலஸ் இருக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு சிறுது ஓய்வு எடுத்துவிட்டு, குழுவில் இருக்கும் மற்றவர்களும் வந்தபிறகு இன்று மாலை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசுகின்றனர். பின்னர் லீலா பேலஸுக்கு திரும்பும் அவர்கள் நாளை புயல் பாதித்த பகுதிகளில் ஆய்வு செய்ய உள்ளனர்.
இந்நிலையில், ஃபெஞ்சல் புயல் பாதிப்பு நிவாரணப் பணிக்காக தமிழ்நாட்டிற்கு ரூ. 994.80 கோடி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் அடிப்படையில், மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ. 994.80 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. மேலும், மத்திய குழுவின் ஆய்வுக்குப் பிறகு தேசிய பேரிடர் நிதியில் இருந்து கூடுதல் நிதி உதவி அளிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.