உலகம்
காசாவின் ‘மனிதாபிமான வலயத்தில்’ இஸ்ரேலின் தாக்குதலில் 21 பேர் உயிரிழப்பு!

காசாவின் ‘மனிதாபிமான வலயத்தில்’ இஸ்ரேலின் தாக்குதலில் 21 பேர் உயிரிழப்பு!
தெற்கு காசாவின் கான் யூனிஸின் இடம்பெயர்ந்த மக்கள் கூடாரங்களில் அடைக்கலம் பெற்றிருக்கும் அல் மவாசி பகுதி மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல்களில் சிறுவர்கள் உட்பட குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகி இருக்கும் டொனால்ட் டிரம்ப் எதிர்வரும் ஜனவரி 20 ஆம் திகதி பதவி ஏற்கும் முன் காசாவில் போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவது மற்றும் பணயக்கைதிகளை விடுவிக்கும் முயற்சியாக தனது மத்திய கிழக்கு தூதுக் குழுவை கட்டார் மற்றும் இஸ்ரேலுக்கு அனுப்பி இருக்கும் நிலையிலேயே இந்த பயங்கர தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இஸ்ரேலினால் மனிதாபிமான வலயமாக அறிவிக்கப்பட்ட மவாசியில் நேற்று முன்தினம் இரவு போர் விமானங்கள் இந்த பயங்கர தாக்குதலை நடத்தியுள்ளது. இடம்பெயர்ந்த மக்கள் வசிக்கும் கூடாரங்களை இஸ்ரேலிய போர் விமானங்கள் இலக்கு வைத்ததாக பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
‘மவாசி பகுதியில் பொதுமக்கள் மாத்திரமே இருப்பது ஆக்கிரமிப்பாளர்களுக்கு நன்றாகத் தெரியும்’ என்று காசாவின் சிவில் பாதுகாப்பு பேச்சாளர் மஹ்மூத் பசல் அல் ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.
கூடாரங்கள் மீதான தாக்குதலில் அந்தப் பகுதியில் தீ பரவி இருப்பதோடு கொல்லப்பட்ட சிலர் தீயில் கருகி இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தத் தாக்குதலில் மேலும் 28 பேர் காயமடைந்திருப்பதாக அருகில் உள்ள நாசர் மருத்துவமனையின் பணிப்பாளர் ஆதிப் அல் ஹூத்தி குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச அழுத்தத்தை அடுத்து அல் மவாசியை இஸ்ரேல் 2023 ஒக்டோபரில் ‘மனிதாபிமான வலயமாக’ அறிவித்தது. அது தொடக்கம் அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் கூடாரங்களில் அடைக்கலம் பெற்றதால் அந்தப் பகுதி காசாவில் அதிக சனநெரிசல் மிக்க இடமாக மாறியுள்ளது. காசாவில் இஸ்ரேலின் போரினால் இரண்டு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் குறைந்தது ஒரு தடவையானது தமது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
இந்த தற்காலிக முகாம் மீது கடந்த மே தொடக்கம் இஸ்ரேல் குறைந்தது எட்டுத் தடவை தாக்குதல் நடத்தி இருப்பதோடு நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இதேவேளை காசா நகரில் ஷெய்க் ரத்வான் பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல் ஒன்றில் 10 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டுள்ளது.
அத் தலூ குடும்பத்திற்குச் சொந்தமான வீடு ஒன்றை இலக்கு வைத்து நடத்திய வான் தாக்குதலிலேயே 10 பேர் கொல்லப்பட்டிருப்பதாக அந்த செய்தி கூறுகிறது.
அதேபோன்று நுஸைரத் அகதி முகாமில் இஸ்ரேலியப் படை நேற்று நடத்திய தாக்குதல் ஒன்றில் குறைந்தது மூவர் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்ததாக காசா சிவில் பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இந்த முகாமின் உதவி விநியோக நிலையத்தில் நேற்று முன்தினம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது நான்கு சிறுவர்கள் கொல்லப்பட்ட நிலையிலேயே புதிய தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
காசாவில் கடந்த ஆண்டு போர் வெடித்தது தொடக்கம் பலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபடுவதாக சர்வதேச மன்னிப்புச் சபை நேற்று (05) குற்றம்சாட்டியது. அந்த அமைப்பு வெளியிட்ட புதிய அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளது.
‘ஒவ்வொரு மாதமும், காசாவில் உள்ள பலஸ்தீனர்களை இஸ்ரேல் மனித உரிமைகள் மற்றும் கண்ணியத்திற்கு தகுதியற்ற மனிதர்களை விடவும் தாழ்வான குழு ஒன்றாக நடத்தி வருவதோடு அவர்களை பௌதீக ரீதியில் அழிக்கும் நோக்கத்தை வெளிப்படுத்தி வருகிறது’ என்று மன்னிப்புச் சபையின் தலைவர் அக்னஸ் கலமார்ட் தெரிவித்துள்ளார்.
‘எமது மோசமான கண்டுபிடிப்புகள் சர்வதேச சமூகத்திற்கான எச்சரிக்கை அழைப்பாக இருக்க வேண்டும், இது இனப்படுகொலையாகும். இது இப்போதே நிறுத்தப்பட வேண்டும்’ என்றும் அவர் வலியுறுத்தினார்.
காசாவில் ஓர் ஆண்டுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் இடைவிடாத தாக்குதல்களில் 44,500க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் சிறுவர்களாவர்.
இதேவேளை அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவி ஏற்ற பின்னர் அவரின் மத்திய கிழக்கு தூதுவராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படும் ஸ்டீவ் விட்கொப் கடந்த நவம்பர் பிற்பகுதியில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் கட்டார் பிரதமர் ஷெய்க் முஹமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருப்பது தெரியவருவதாக ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
14 மாதங்களாக நீடிக்கும் போரில் பைடன் நிர்வாகத்தினால் முன்னெடுக்கப்பட்ட போர் நிறுத்த முயற்சிகள் வெற்றி அளிக்காத நிலையிலேயே டிரம்ப் தூதுக் குழு இந்த முயற்சியை ஆரம்பித்துள்ளது.
இதன்போது கடந்த மாதம் தனது மத்தியஸ்த பணிகளை இடைநிறுத்திய கட்டார் மீண்டும் அதனை ஆரம்பிக்கும் சமிக்ஞைகளை வெளிப்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
அதேபோன்று ஹமாஸ் பேச்சுவார்த்தையாளர்கள் கட்டார் தலைநகர் டோஹா திரும்பி மேலும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வாய்ப்பு இருப்பதாக இது தொடர்பில் தெரிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.