இந்தியா
“நிதிப்பகிர்வு முறையில் நியாயமான அணுகுமுறை” – மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்!

“நிதிப்பகிர்வு முறையில் நியாயமான அணுகுமுறை” – மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்!
எதிர்கால நகரமயமாதலுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளுக்குத் தேவைப்படும் வளங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், 1951ஆம் ஆண்டு முதல் நிதிக்குழு அமைக்கப்பட்டதில் இருந்தே அதன் நோக்கங்களுக்கும், அரசின் செயல்பாடுகளுக்கும் இடையே பெரும் இடைவெளி இருந்து வருவதால் தான் நிதிப்பகிர்வு முறையில் புதிய மற்றும் நியாயமான அணுகுமுறையை முன்வைப்பதாகத் தெரிவித்துள்ளார்.
15ஆவது நிதிக்குழு மாநிலங்களுக்கு 41% வரிப்பகிர்வு அளிக்க வேண்டும் என்று பரிந்துரைத்த நிலையிலும், 33.16 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டதாகவும், எதிர்பாராத விதமாக வரி மற்றும் கூடுதல் கட்டணங்களை மத்திய அரசு உயர்த்தியதே பகிர்வில் ஏற்பட்ட இந்த வீழ்ச்சிக்குக் காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.
மத்திய வரி வருவாயில் இருந்து மாநிலங்களுக்கு 50 சதவீத வரிப்பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்பது, மாநிலங்கள் நிதி சுயாட்சியுடன் செயல்படவும், மாநில மக்களுக்குத் தேவையான திட்டங்களை அறிமுகப்படுத்தவும் உதவும் எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சியின் உந்துசக்தியாக இருக்க, வளர்ச்சியடைந்த மாநிலங்களுக்கு சமமான பங்கீட்டுக் கொள்கை வரிப்பகிர்வு முறையே அவசியம்.
வயதான மக்களுக்கான திட்டங்களுக்கு ஆகும் செலவினங்கள் அதிகரிக்கும் நிலையில், மாநிலங்கள் ‘நடுத்தர வருமான மாநிலம்’ எனும் பொறிக்குள் சிக்காமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டியது அவசியம் என்றும் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.