உலகம்
ரஷ்யாவில் நெகிழ்ச்சி சம்பவம்.. உயிரிழந்த உரிமையாளருக்காக பனியில் காத்திருக்கும் நாய்!

ரஷ்யாவில் நெகிழ்ச்சி சம்பவம்.. உயிரிழந்த உரிமையாளருக்காக பனியில் காத்திருக்கும் நாய்!
பல சோசியல் மீடியா பயனர்கள் இணையத்தில் இந்த நாயின் புகைப்படங்களைப் பகிர்ந்து வருவதால் மறுபடியும் பெல்காவின் கதை இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது. ஹச்சிகோ என்ற ஜப்பானிய நாய் தனது உரிமையாளரின் மரணத்திற்குப் பிறகும் கிட்டத்தட்ட பத்து வருடங்கள் தினமும் ரயில் நிலையத்தில் காத்திருந்ததை இந்த நாய் நினைவூட்டுவதாக பலர் இணையத்தில் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
59 வயதுடைய ஒருவர் பனியில் உறைந்து போயிருக்கும் ஆற்றின் அருகில் சைக்கிள் ஓட்டிச் சென்ற போது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. திடீரென அடியில் இருந்த பனிக்கட்டி உடைந்து போனதால் நீரில் மூழ்கி அந்த நபர் இறந்து போயுள்ளார். அந்த வழியாக வந்த ஒரு நபர் அவரைக் காப்பாற்ற முயன்ற போதும், ஆற்றில் நீரோட்டம் அதிகமாக இருந்ததால், தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டார். மீட்புக் குழுக்கள் பல நாட்கள் தேடி ஒரு வழியாக உஃபா ஆற்றில் அவரது உடலை மீட்டனர்.
இதில் சோகம் என்னவென்றால், இறந்து போனவரின் நாய் நான்கு நாட்களாக ஆற்றங்கரையில் நின்று, தன்னுடைய உரிமையாளர் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறது. உரிமையாளரின் குடும்பத்தினர் நாயை வீட்டிற்கு அழைத்துச் சென்றபோதும், பெல்கா மீண்டும் மீண்டும் அவரை கடைசியாகப் பார்த்த இடத்திற்குத் திரும்பி வந்தது. அவர் இறந்த இடத்தை விட்டு வெளியேற மறுத்து, இரவும் பகலும் பனிக்கட்டியில் அமர்ந்து கொண்டிருக்கிறது பெல்கா.
“நிகோலாய் (உரிமையாளர்) பெல்காவை நாய்க்குட்டியாக இருந்த போதிலிருந்து வளர்த்து வருகிறார். அவர் அதை எங்கிருந்து பெற்றார் என்பது கூட எங்களுக்கு நினைவில்லை. ஆனால் இருவரும் ரொம்பவும் அன்பாக இருந்தனர். நிகோலாய் எங்கு போனாலும் அவரை பின்தொடர்ந்தது செல்வதோடு ஒருபோதும் அவரை விட்டு விலகாமல் இருக்கும். அவரது வாழ்நாள் முழுவதும் அது அவருடனேயே இருந்தது” என்று உரிமையாளரின் சகோதரர் தெரிவிக்கிறார். இனி நான் பெல்காவை எனது வீட்டிற்கு அழைத்துச் செல்ல உள்ளேன். ஆனால் நிகோலாயை போல் என்னால் பாசமாக இருக்க முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை” என்றும் அவர் கூறுகிறார்.
உரிமையாளருக்காக பெல்காவின் காத்திருப்பை பல பயனர்கள் சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருவதால் நாயின் கதை பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது. தனது உரிமையாளரின் மரணத்திற்குப் பிறகும் கிட்டத்தட்ட பத்து வருடங்கள் தினசரி ரயில் நிலையத்தில் காத்திருந்த புகழ்பெற்ற ஜப்பானிய நாய் ஹச்சிகோவுடன் இந்த நாயை ஒப்பிட்டு, எஜமானர் மீது கொண்ட நாயின் பாசத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.