இந்தியா
VCK | விசிக கொடி கம்பத்திற்கு அனுமதி மறுப்பு – மதுரையில் விசிகவினர் போராட்டம்

VCK | விசிக கொடி கம்பத்திற்கு அனுமதி மறுப்பு – மதுரையில் விசிகவினர் போராட்டம்
மதுரையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் 45 அடி உயரமுள்ள கொடி கம்பத்திற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்ததையடுத்து, விசிக நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை வடக்கு தாலுகாவிற்கு உட்பட்ட வெளிச்சநத்தம் கிராமத்தில் கடந்த 1996 ஆம் ஆண்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் 25 அடி உயரமுள்ள கொடி கம்பத்தை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் ஏற்றி வைத்திருந்தார்.
இந்நிலையில் வெளிச்சநத்தம் கிராமத்தில் 25 அடி உயரமுள்ள கொடி கம்பத்தை 45 அடியாக உயர்த்திய நிலையில், நாளை மதுரை மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தரும் திருமாவளவனை அழைத்து கட்சிக் கொடியை ஏற்ற கட்சி நிர்வாகிகள் திட்டமிட்டிருந்தனர்.
இந்நிலையில் 25 அடி உயரமுள்ள கொடி கம்பத்திற்கு மட்டுமே அனுமதி என்றும், 45 அடி உயரமுள்ள கொடி கம்பத்தை நிறுவ அனுமதி இல்லை என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்த நிலையில், கொடி கம்பம் முன்பாக கட்சி நிர்வாகிகள் 20க்கும் மேற்பட்டோர் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.