Connect with us

இந்தியா

டிஜிட்டல் திண்ணை: ஆதவ் அர்ஜுனாவுக்கு நேர்ந்த கதி… விஜய் ரியாக்‌ஷன் என்ன?

Published

on

Loading

டிஜிட்டல் திண்ணை: ஆதவ் அர்ஜுனாவுக்கு நேர்ந்த கதி… விஜய் ரியாக்‌ஷன் என்ன?

வைஃபை ஆன் செய்ததும் விசிகவின் துணைப் பொதுச் செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனா 6 மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை ஒட்டிய ரியாக்‌ஷன்கள் இன்பாக்சில் வந்து விழுந்து கொண்டிருந்தன.

அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

Advertisement

“டிசம்பர் 6 ஆம் தேதி நடந்த அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாதான் தமிழக வெற்றிக் கழகத் தலைவராக விஜய் கலந்துகொண்ட முதல் பொது நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சி பல வகைகளிலும் சர்ச்சைக்குள்ளானது.

இந்த நிகழ்வை விகடன் நிறுவனத்தோடு சேர்ந்து ஏற்பாடு செய்த வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் நிறுவனத்தின் தலைவரான ஆதவ் அர்ஜுனா இந்நிகழ்வில் பேசிய பேச்சு, திமுக விசிக கூட்டணியில் அதிர்வுகளை ஏற்படுத்தியது. அதன் விளைவாக டிசம்பர் 9 ஆம் தேதி காலை, அவர் விசிகவின் துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.

இதற்கு ரியாக்‌ஷனாக ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள அறிக்கையில், ’நான் கட்சியில் என்ன பணி செய்தேன் என்பதை அடிமட்ட தொண்டர்களாய் களமாடும் தோழர்கள் நன்கு அறிந்திருப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அந்த தொண்டர்களின் குரலாக நான் எப்போதும் இருப்பேன்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

Advertisement

ஆதவ் அர்ஜுனா தற்போது டெல்லியில் இருக்கிறார். டெல்லியில் உள்ள தனது வீட்டில் இருந்தபடி, புத்தக வெளியீட்டு விழாவின் போது தன்னைப் பற்றி திரையிடப்பட்ட வீடியோவை இன்று காலை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில்  திமுகவுக்காக அவர் தேர்தல் வேலை பார்த்தபோது முதல்வர் ஸ்டாலின், அவரது மாப்பிள்ளை சபரீசன், தேர்தல் உத்தி நிபுணர் பிரசாந்த் கிஷோர் ஆகியோரோடு எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால் அவர் உதயநிதியோடு பல படங்கள் எடுத்துக் கொண்டிருந்தபோதிலும் அதைப் பயன்படுத்தவில்லை. இதை சுட்டிக் காட்டிய திமுகவினர், ‘உதயநிதி மீதான தனிப்பட்ட கோபத்தையே இப்படி  விசிக மூலமாக வெளிக்காட்டி இப்போது இப்படி ஒரு நிலைமைக்கு ஆளாகியிருக்கிறார்’ என்கிறார்கள்.

விசிக தலைவர் திருமாவளவன் இந்த நீக்கம் தொடர்பாக நேற்று இரவு 10.30க்கு ஃபேஸ்புக் நேரலையில் வந்து 40 நிமிடங்கள் ஆதவ் அர்ஜுனா விவகாரம் தொடர்பாக பேசியிருக்கிறார்.  இந்த விவகாரத்தால் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலை விசிக தொண்டர்களிடம் மனம் திறந்து பேசியிருக்கிறார் திருமா.

Advertisement

இந்த நிலையில்  ஆதவ் அர்ஜுனா தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய  வேண்டும் என்றும், இணையப் போகிறார் என்றும் சமூக ஊடகங்களில் பலரும் தங்களது விருப்பத்தையும் கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள். விஜய்யை அவர் அந்த மேடையில் புகழ்ந்ததை வைத்து இப்படி பலரும் தங்களது விருப்பத்தை வெளியிட்டு வருகிறார்கள்.

இன்னொரு பக்கம் விஜய்க்கு வேலை பார்ப்பவர் ஆகிவிட்டார் ஆதவ் அர்ஜுனா என்று விசிகவின் துணைப் பொதுச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ஆளூர் ஷா நவாஸ் போன்றோர் பகிரங்கமாகவே ஆதவ் மீது குற்றம் சுமத்தினார்கள்.

தான் பங்கேற்ற முதல் பொது நிகழ்ச்சியின் மூலம், தான் மதிப்பு வைத்திருக்கும் திருமாவளவன் தலைமையிலான விசிகவில், இப்படி ஒரு அதிர்வு ஏற்பட்டது பற்றி விஜய் என்ன நினைக்கிறார், அவருடைய ரியாக்‌ஷன் என்ன என்ற கேள்வியும் அரசியல் வட்டாரங்களில் எழுந்திருக்கிறது.

Advertisement

விஜய்க்கு நெருக்கமான வட்டாரங்களில் பேசியபோது, ‘அந்த நிகழ்ச்சியில் விகடன் குழுமத் தலைவர் தன்னை நேரில் வந்து அழைத்ததன் பேரில்தான் விஜய் கலந்துகொண்டார். மேலும் தனது கட்சியின் கொள்கைச் சின்னங்களில் ஒருவராக பிரகடனப்படுத்தியுள்ள அம்பேத்கர் தொடர்பான புத்தகம் என்பதால்தான் அந்த விழாவில் கலந்துகொள்ள முடிவெடுத்தார் விஜய்,

மற்றபடி ஆதவ் அர்ஜுனா பற்றி அவர் எந்த விஷயத்தையும் விழாவுக்கு முன்போ, பின்போ பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அவர் அந்த விழாவில் ஆற்றிய உரையை கவனித்துப் பார்த்தாலே தெரியும், மேடையில் அமர்ந்திருந்த ஒவ்வொருவரையும் அவரவர் பொறுப்பை சொல்லி அடையாளப்படுத்திய விஜய்,  நூல் உருவாக்க உரை ஆற்றிய ஆதவ் அர்ஜுனாவை, வாய்ஸ் ஆஃப் காமன் தலைவர் என்றோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச் செயலாளார் என்றோ சொல்லி அழைக்கவில்லை. ’திரு. ஆதவ் அர்ஜுனா அவர்களே’ என்று மட்டுமே குறிப்பிட்டார் விஜய்.

மேலும், ‘முக்கியமாக இப்படி ஒரு ஃபங்க்‌ஷன் செய்து அதில் எனக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த விகடன் குழுமத்துக்கு நன்றி’ என்றுதான் கூறினார்.

Advertisement

நிகழ்ச்சி முடிவில் மேடையில், ஆதவ் கேட்டுக் கொண்டதால்தான், அவரை கட்டியணைத்துக் கொண்டார் விஜய் என்பதை அந்த காட்சியைப் பார்த்தாலே தெரிந்துகொள்ள முடியும்.

விஜய் இந்த நிகழ்வில் பங்கேற்றது முழுக்க முழுக்க அம்பேத்கருக்காகவும், விகடன் குழுமத்துக்காகவும்தான். ஆதவ் அர்ஜுனா பற்றியெல்லாம் அவர் எந்த கருத்தையும் கொண்டிருக்கவில்லை’ என்கிறார்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன