உலகம்
ஹமாஸ் – இஸ்ரேலுக்கு இடையே சிறிய அளவிலான போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பு!

ஹமாஸ் – இஸ்ரேலுக்கு இடையே சிறிய அளவிலான போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பு!
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் சிறிய அளவிலான போர் நிறுத்த உடன்படிக்கை ஒன்றை நெருங்கி இருப்பதாக இஸ்ரேலிய அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி அதன் ஒளிபரப்பு நிர்வாகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இரு தரப்பும் இரண்டு மாத போர் நிறுத்தம் உட்பட உடன்பாடு ஒன்றை இறுதி செய்வதை நெருங்கி இருப்பதாக பெயர் குறிப்பிடாத இஸ்ரேலிய தரப்பை மேற்கோள்காட்டி அந்த செய்தி குறிப்பிட்டுள்ளது. மனிதாபிமான அடிப்படையில் வயதானவர்கள், பெண்கள், காயமடைந்தோர் மற்றும் சுகவீனமுற்ற கைதிகளை விடுவிப்பது மற்றும் காசாவின் சில பகுதிகளில் இருந்து இஸ்ரேலிய படை வாபஸ் பெறப்படுவது ஆகியவை இந்த உடன்படிக்கையில் உள்ளடக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
எனினும் ஹமாஸ் மற்றும் மத்தியஸ்தம் வகிக்கும் நாடுகளான எகிப்து மற்றும் கட்டார் இது தொடர்பில் எந்த பதிலும் அளிக்கவில்லை.
ஹமாஸ் பிரதித் தலைவர் கலீல் அல் ஹய்யா தலைமையிலான ஹமாஸ் பிரதிநிதிகள் குழு, எகிப்து உளவுச் சேவை தலைவர் மேஜர் ஜெனரல் ஹசன் ரஷாத்துடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் நேற்று முன்தினம் எகிப்து தலைநகர் கெய்ரோவை விட்டு வெளியேறியுள்ளனர்.
பலஸ்தீன மக்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் போர் நிறுத்த முயற்சியை உறுதி செய்வதற்கான அர்ப்பணிப்பை ஹமாஸ் குழு வலியுறுத்தி இருந்தது.
இதனிடையே காசாவில் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் பணயக்கைதிகளின் குடும்பத்தினரை கடந்த ஞாயிற்றுக்கிழமை சந்தித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, சிரியாவில் பஷர் அல் அஸாத் அரசு கவிழ்க்கப்பட்டது பணயக்கைதிகள் பரிமாற்றத்திற்கான வாய்ப்பை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஒக்டோபரில் இஸ்ரேல் மீது பலஸ்தீன போராளிகள் நடத்திய தாக்குதலின்போது கடத்தப்பட்ட பணயக்கைதிகளில் தொடர்ந்து 101 பேர் காசாவில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது.
எனினும் தற்போதைய மோதலை நிறுத்துவதற்கு நெதன்யாகு மறுத்து வரும் நிலையில் அமெரிக்கா, எகிப்து மற்றும் கட்டாரின் மத்தியஸ்தத்துடன் இடம்பெற்று வரும் போர் நிறுத்த முயற்சிகள் முன்னேற்றம் இன்றி காணப்படுகிறது.
இந்நிலையில் காசாவில் இஸ்ரேல் ஓர் ஆண்டுக்கு மேலாக தொடர்ந்தும் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது.
மத்திய காசாவில் ஞாயிறு இரவு நடத்திய தாக்குதல்களில் பெண் ஒருவர் உட்பட ஆறு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதில் இஸ்ரேலிய சிறையில் இருந்து 2014 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்ட ரயித் கபைன் என்பவரும் கொல்லப்பட்டவர்களில் இருப்பதாக அல் அக்ஸா தியாகிகள் வைத்தியசாலை தெரிவித்துள்ளது.
மத்திய நகரான சுவைதாவில் தனது மனைவியுடன் கூடாரத்தில் தங்கி இருந்தபோதே அவர் கொல்லப்பட்டிருப்பதோடு இந்தத் தாக்குதலில் அவரது மனைவியும் பலியாகியுள்ளார். நுஸைரத் அகதி முகாமில் வீடு ஒன்றின் மீது இடம்பெற்ற மற்றொரு தாக்குதலில் மேலும் இருவர் பலியானதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவித்துள்ளன.
வாதி காசா பகுதியில் நேற்றுக் காலை இடம்பெற்ற தாக்குதலில் மேலும் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 44,700ஐ தாண்டியுள்ளது.