சினிமா
100 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‘கோல்டன் ஸ்பேரோ’ பாடல்..!

100 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‘கோல்டன் ஸ்பேரோ’ பாடல்..!
கடந்த 2017-ம் ஆண்டில் ராஜ்கிரண், ரேவதி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ‘ப.பாண்டி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநர் அவதாரம் எடுத்தார் நடிகர் தனுஷ். அந்த திரைப்படம் வசூல் ரீதியில் வெற்றி அடைந்தது. இயக்குநராகவும் தனுஷ் வெற்றியடைந்திருந்தார். அதை தொடர்ந்து இரண்டாவதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க தனது 50ஆவது படமான ராயன் படத்தை தானே இயக்கி நடித்தார். ராயன் வெளியாகி மக்கள் மத்தியில் சூப்பர் ஹிட் அடித்தது. மிரளவைக்கும் ஆக்சன் காட்சிகளுடன் ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் படம் பார்வையாளர்களை ஈர்த்தது.
ராயன் படத்தின் வெற்றிக்கு பிறகு தனுஷ் இயக்கிவரும் படம் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’. இளம் நடிகர், நடிகைகளை படத்தில் களமிறக்கி 2கே கிட்ஸின் காதலை சொல்லும் ராம்காம் பாணியில் இந்த படம் உருவாகிவருகிறது, படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் தன்னுடைய சகோதரி கார்த்திகா மகன் பவிஷை ஹீரோவாக்கியுள்ளார் தனுஷ். அனிகா சுரேந்திரன், பிரியா வாரியர், மேத்யூ தாமஸ் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
தந்தை கஸ்தூரிராஜா தயாரிக்க, மகன் தனுஷ் இயக்க, பேரன் பவிஷ் நாயகனாக உருவெடுத்துள்ளார். NEEK படத்தின் ‘கோல்டன் ஸ்பாரோவ்’ பாடல் ஆகஸ்ட் 30ம் தேதி வெளியானது. படத்தின் இந்த முதல் பாடல் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய ஹிட் அடித்தது. பிரியங்கா மோகன் கேமியோ பெர்பாமன்ஸ் செய்திருக்கும் இந்த பாடலை சுபலட்சுமி, ஜிவி பிரகாஷ் குமார், தனுஷ் மற்றும் அறிவு சேர்ந்து பாடியுள்ளனர், இந்த பாடலின் வரிகளை எழுதியவர் அறிவு.
பாடல் வெளியான முதலே சக்கைபோடு போட்டு வரும் நிலையில், தற்போது இந்த பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து கெத்து காட்டியுள்ளது. இதனை போஸ்டர் மூலம் படக்குழு அறிவித்துள்ளது. NEEK படத்தை தொடர்ந்து தற்போது தனுஷ் இட்லி கடை படத்தை இயக்கி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.