இந்தியா
Aadhav Arjuna: 5 வயதிலேயே கண்முன் தாய்க்கு நிகழ்ந்த சோகம்.. பலரும் அறியாத ஆதவ் அர்ஜுனாவின் மறுபக்கம்!

Aadhav Arjuna: 5 வயதிலேயே கண்முன் தாய்க்கு நிகழ்ந்த சோகம்.. பலரும் அறியாத ஆதவ் அர்ஜுனாவின் மறுபக்கம்!
கூடைப்பந்து வீரராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர், திருச்சியைப் பூர்விகமாகக் கொண்ட இவர், தனது இளம்வயதில் அரசியல் மீதான ஈடுபாடு காரணமாக எம்சிசி கல்லூரியில் அரசியல் அறிவியல் பாடப்பிரிவில் பட்டம் பெற்றார். பள்ளி, கல்லூரி காலங்களிலேயே கூடைப்பந்து விளையாட்டில் கவனம் செலுத்திய ஆதவ், மாவட்ட – மாநில அளவில் ஏராளமான போட்டிகளில் பங்கேற்று பிறகு இந்திய கூடைப்பந்து அணிக்காக விளையாடியுள்ளார். பிறகு தமிழ்நாடு கூடைப்பந்து சங்கத்தின் தலைவர், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச்செயலாளர் என பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்த ஆதவ் அர்ஜுனா, இந்திய கூடைப்பந்து சம்மேளனத்தின் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகனான இவர், 2019 மற்றும் 2021 தேர்தல்களில், பிரபல வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோருடன் இணைந்து திமுகவுக்காக தேர்தல் பணியாற்றினார். சில கருத்து வேறுபாடுகள் காரணமாக அங்கிருந்து வெளியேறி “Voice of Commons” என்ற நிறுவனத்தை தொடங்கிய ஆதவ் அர்ஜுனா விசிகவின் வியூக வகுப்பாளரானார்.
கடந்த ஜனவரி மாதம் 26-ஆம் தேதி திருச்சியில் நடந்த “வெல்லும் சனநாயகம்” மாநாட்டில், திருமாவளன் முன்னிலையில், விசிக உறுப்பினராக ஆதவ் அர்ஜுனா இணைந்தார். இதன்பின் அவருக்கு துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் வேலைகள் செய்த இவர், தற்போது திமுகவுக்கு எதிராக பேசி சஸ்பெண்ட் நிலையை எதிர்கொண்டுள்ளார்
இந்த தகவல்கள் பலரும் அறிந்ததே. ஆனால், இதனை தாண்டி அவரை பற்றி யாரும் பல தகவல்கள் உள்ளன. விசிகவில் இருந்து சஸ்பெண்ட் செய்வதற்கு காரணமாக அமைந்த அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் தனக்கு நேர்ந்த சம்பவங்களை பற்றி மனம் திறந்தார் ஆதவ் அர்ஜுனா.
தமிழகத்தின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியான திலகவதி ஐபிஎஸ் ஆதவ் அர்ஜுனாவுக்கு பெரியம்மா. திலகவதி ஐபிஎஸின் சகோதரி மகன் தான் ஆதவ் அர்ஜுனா. 11 பேர் கொண்ட பெரிய குடும்பம் அது. அன்றைய காலகட்டத்தில் ஆதவ் அர்ஜுனாவின் தாய், காதல் திருமணம் செய்ய விரும்பியுள்ளார்.
ஆனால், சாதியை காரணம் காட்டி காதல் திருமணத்தை மறுத்த ஆதவ் அர்ஜுனாவின் பாட்டி, தனது மகளை வேலூரைச் சேர்ந்த விவசாயிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளார். இந்த திருமணம் எதிர்பார்த்த அளவுக்கு அமையவில்லை.
குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ஆதவ் அர்ஜுனாவின் கண் முன்னே அவரின் தாய் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அப்போது ஆதவ் அர்ஜுனாவுக்கு வயது ஐந்து மட்டுமே. தாயை இழந்த குழந்தையாக தனது உடன்பிறந்தவருடன் தவித்த ஆதவ் அர்ஜுனாவுக்கு அடைக்கலம் கொடுத்தது திலகவதி ஐபிஎஸே. அப்போது டிஎஸ்பியாக இருந்த திலகவதி, ஆதவ் அர்ஜுனாவையும், அவரின் உடன் பிறந்தவரையும் அவர்களின் மாமாவிடம் ஒப்படைத்து வளர்த்து வந்துள்ளார்.
ஐந்து வயதில் தனது கண் முன்னே தாயின் தற்கொலையால் இழப்பை சந்தித்த ஆதவ் அர்ஜுனாவை தனிமை சூழ்ந்தது. அதில் இருந்து அவர் விடுபட விளையாட்டு பக்கம் அவரின் கவனத்தை திசை திருப்பியிருக்கிறார் திலகவதி ஐபிஎஸ்.
அதன்பின் தனக்கு விளையாட்டே அனைத்துமாக மாறியது என்றும், விளையாட்டின் மூலமாகவும், சிறுவயதில் தான் சந்தித்த சாதிய கொடுமைகள் மூலமாகவும் தனக்கு அரசியல் ஆர்வம் வந்ததாக குறிப்பிட்டுள்ளார் ஆதவ் அர்ஜுனா. ஆனால், அரசியல் ஆர்வம் அரசியல்வாதியாக அல்லாமல், மாவோயிஸ்ட் அல்லது நக்ஸலைட் ஆக என்பதாக இருந்ததாம். அதனை மடைமாற்றியவர் ஆதவின் பேராசிரியர்.
“சென்னை எம்சிசி கல்லூரியில் படித்து கொண்டிருந்த என்னை தேர்தல் அரசியல் குறித்தும், அவற்றை பகுப்பாய்வது குறித்தும் அறிந்துகொள்ள தூண்டியது எங்கள் கல்லூரி பேராசிரியர்தான்” என்றுள்ளார் ஆதவ் அர்ஜுனா. அப்படித்தான் பெரியார் குறித்தும், அம்பேத்கர் குறித்தும், தேர்தல் அரசியல் குறித்தும் ஆய்வு செய்துள்ளார் ஆதவ். அவ்வாறாக ஆதவின் அரசியல் என்ட்ரி அமைந்துள்ளது.
சிறுவயதிலேயே தாயை இழந்தாலும், தனது பெரியம்மா திலகவதி மீதான இன்ஸ்பிரேஷனால் படிப்பின் மீதும் கவனம் செலுத்தி இந்த நிலைக்கு வந்ததாக ஆதவ் அர்ஜுனா உருகியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது வலைதளங்களில் கவனம் பெற்றுவருகிறது.