இந்தியா
நாட்டையே திரும்பி பார்க்க வைத்த மிகப்பெரிய சமூகநீதிப் போராட்டம்.. ‘வைக்கம்’ வரலாறு

நாட்டையே திரும்பி பார்க்க வைத்த மிகப்பெரிய சமூகநீதிப் போராட்டம்.. ‘வைக்கம்’ வரலாறு
இந்தியாவில் நடைபெற்ற மிகப்பெரிய சமூகநீதிப் போராட்டங்களுள் முக்கியமானது வைக்கம் போராட்டம். கேரளாவின் கோட்டயம் மாவட்டத்திலுள்ள வைக்கம் என்ற ஊரிலுள்ள சிவன் கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களில் அவர்ணஸ்தர்கள், அயித்தக்காரர்கள், ஈழவர்கள், தீயர்கள், புலையர்கள் உள்ளிட்ட தாழ்த்தப்பட்டோர் நடமாடக்கூடாது என திருவிதாங்கூர் சமஸ்தான அரசு சட்டம் பிறப்பித்திருந்தது. இத்தனைக்கும் அந்தத் தெருக்களில்தான் அரசு அலுவலகங்கள், நீதிமன்றம் உள்ளிட்டவை இருந்தன. முற்போக்கு சிந்தனைக் கொண்ட கேரள காங்கிரஸ் தலைவர்கள் பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சத்தியாகிரக போராட்டம் நடத்த அனுமதி கோரி, ஜார்ஜ் ஜோசப், கேசவ மேனன், டி.கே.மாதவன் உள்ளிட்டோர் காந்திக்குக் கடிதம் எழுதினர்.
காந்தியின் அனுமதியைத் தொடர்ந்து, 1924 ஆம் ஆண்டு மார்ச் 30 ஆம் தேதி வைக்கம் போராட்டம் தொடங்கியது. தினமும் மூவர் வீதம் தடை செய்யப்பட்ட தெருக்களுக்கு சென்ற நிலையில், அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். தலைவர்கள் கைதான நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த பெரியார் போராட்டத்தை தொடர வேண்டும் என ஜார்ஜ் ஜோசப், கே.பி.கேசவ மேனன் உள்ளிட்ட கேரள காங்கிரஸ் தலைவர்கள் கடிதம் எழுதினர். தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தில் பங்கேற்க இதைவிட பெருவாய்ப்பு கிடைக்காது என்று கணித்த பெரியார், 1924 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி வைக்கம் சென்றடைந்தார்.
பெரியாரின் தொடர் பொதுக்கூட்டங்கள் மூலம், போராட்டத்துக்கு பெருவாரியான ஆதரவு கிடைத்தது. போராட்டக் களம் நோக்கி மக்கள் திரண்டு வந்ததை உணர்ந்த திருவிதாங்கூர் அரசு, பெரியார் பேசுவதற்குத் தடைவிதித்தது. தொடர்ந்து பெரியார் போராட்டம் நடத்துவதற்கும் தடைவிதித்தது. பெரியாரும் கோவை அய்யாமுத்துவும் தடையை மீறிப் போராட்டத்தில் ஈடுபடவே, அவர்கள் கைது செய்யப்பட்டு ஒரு மாதம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஒரு மாத சிறைக்குப் பின்பு வெளியே வந்த பெரியார், தீவிரப் போராட்டத்தில் இறங்கினார். வைக்கம் போராட்ட செய்தி. திருவிதாங்கூரைக் கடந்து பஞ்சாப் வரை பரவியது. பஞ்சாப்பிலிருந்து சீக்கியர்களும் வந்து வைக்கம் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த நிலையில்தான் திருவிதாங்கூர் மன்னர் காலமானார். வைக்கம் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முடிவு செய்த திருவிதாங்கூர் ராணி, பேச்சுவார்த்தை நடத்த வருமாறு, ராஜாஜிக்கு கடிதம் எழுதினார். ராஜாஜி அதை காந்தியிடம் கூற, வைக்கம் புறப்பட்டார் அவர். ராணியை காந்தி சந்தித்தபோது, “ஆலய நுழைவுப் போராட்டத்தைத் தொடங்கமாட்டேன் என்று பெரியார் உத்தரவாதம் கொடுத்தால், உடனடியாக தெருவுக்குள் நுழைவதற்கானை தடையை நீக்கவிடலாம் என நிபந்தனை விதித்தார்.
Also Read :
பா.ம.க. முன்னாள் எம்.எல்.ஏ. நில அபகரிப்பு வழக்கு; ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு
ஆலய நுழைவுதான் லட்சியம் என்றாலும், மக்களைப் பக்குவப்படுத்தும் வரை, அந்த போராட்டத்தை கையிலெடுக்கப் போவதில்லை என பெரியாறும் உறுதியளிக்க தாழ்த்தப்பட்ட மக்கள் தெருக்களில் நடக்க விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உத்தரவிட்டார் திருவிதாங்கூர் ராணி. இவ்வாறு முடிவுக்கு வந்தது வைக்கம் போராட்டம். வைக்கம் போராட்டத்தின் போது, பெரியாரை “வைக்கம் வீரர்” என குறிப்பிட்டு திருவிக எழுத, அதுவே பின்னாளில் நிலைத்துவிட்டது. வைக்கம் போராட்டத்தை வழிநடத்தி வெற்றிபெறச் செய்த பெரியாருக்கு வைக்கத்தில் சிலை எடுத்துப் புகழ் சேர்த்தனர் கேரளத்து மக்கள்.