இலங்கை
புதிய இளம் வாக்காளர்களையும் உள்வாங்கும் வகையில் சட்டத்திருத்தத்தை மேற்கொள்ள நடவடிக்கை!

புதிய இளம் வாக்காளர்களையும் உள்வாங்கும் வகையில் சட்டத்திருத்தத்தை மேற்கொள்ள நடவடிக்கை!
புதிய இளம் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு 2024 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பைப் பயன்படுத்தி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தும் வகையில் சட்டங்களைத் திருத்துமாறு சட்ட வரைவுத் திணைக்களத்திற்கு அமைச்சர்கள் பேரவை தெரிவித்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலைப் பயன்படுத்தி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரி அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் சட்டமா அதிபர் மேற்படி விளக்கமளித்துள்ளார்.
பிரதம நீதியரசர் முர்து பெர்னாண்டோ, அர்ஜுன ஒபேசேகர மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது நீதிமன்றத்தில் பேசிய சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சட்டதரணி 2024ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலைப் பயன்படுத்தி உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்ற சட்டத்தில் திருத்தம் செய்து இளம் வாக்காளர்கள் வாக்களிக்கலாம் என சட்ட வரைவுத் துறைக்கு அமைச்சர்கள் குழு தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்து புதிய வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் வகையில் சட்டங்களைத் திருத்த அமைச்சர்கள் சபை அறிவுறுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.