உலகம்
ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்; அமைச்சர் சாவு!

ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்; அமைச்சர் சாவு!
ஆப்கான் தலைநகர் காபூலில் தலிபான் அரசின் அகதிகள் நலத் துறை அமைச்சர் கலீல் ஹக்கானி தற்கொலை குண்டுவெடிப்பு மூலம் படுகொலை செய்யப்பட்டார்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
காபூலில் உள்ள அகதிகள் நலத்துறை அமைச்சகத்துக்கு வந்த பயங்கரவாதி, தனது உடலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார்.
இதில், அங்கிருந்த அமைச்சர் கலீல் ஹக்கானி உயிரிழந்தார் என்று அதிகாரிகள் கூறினர்.
தலிபான் அமைப்பில் மிகவும் செல்வாக்கு மிக்கவராக விளங்கிய கலீல் ஹக்கானி படுகொலை செய்யப்பட்டிருப்பது அந்த அமைப்புக்கு மிகப் பெரிய பின்னடைவு என்று கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. கடந்த 2021ஆம் ஆண்டில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே அவா்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்திவரும் இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாத அமைப்பு இந்த தற்கொலை குண்டுவெடிப்பையும் நடத்தியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அதே நேரம், அமைச்சரகத்துக்குள்ளேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் தலிபான் அமைப்பைச் சேர்ந்த போட்டிக் குழுவினரே இந்தத் தாக்குதலின் பின்னணியில் இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.