இந்தியா
திமுகவுக்கு பயம் வந்துவிட்டது… பொதுக்குழுவில் எடப்பாடி ஆவேசம்!

திமுகவுக்கு பயம் வந்துவிட்டது… பொதுக்குழுவில் எடப்பாடி ஆவேசம்!
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததால், திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (டிசம்பர் 15) தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி மண்டபத்தில் இன்று (டிசம்பர் 15) நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, “2021 சட்டமன்ற தேர்தலின் போது திமுக 525 அறிவிப்புகளை வெளியிட்டார்கள். ஆனால், 10 சதவிகித அறிவிப்புகளைக் கூட அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை.
முதல்வர் ஸ்டாலினும் அமைச்சர்களும் 98 சதவிகித வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக பொய் சொல்கிறார்கள். இதற்கெல்லாம் 2026 சட்டமன்ற தேர்தலில் ஸ்டாலின் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததால், அரசு ஊழியர்கள், போக்குவரத்து ஊழியர்கள், மருத்துவர்கள், பகுதிநேர ஆசிரியர்கள் என தமிழகம் முழுவதும் கடந்த ஓராண்டுக்கும் மேலாக திமுக ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது.
திமுக ஆட்சிக்கு வந்தபோது மக்கள் சில எதிர்பார்ப்புகளை வைத்திருந்தனர். அந்த எதிர்பார்ப்புகளுக்கு மாறாக தான் தற்போது திமுக ஆட்சி நடந்து வருகிறது. பால் விலை, மின் கட்டணம், வீட்டு வரி, சொத்து வரி, கடை வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதுதான் திமுகவின் சாதனை.
ஒவ்வொரு ஆண்டும் 100 நாட்கள் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் என்று தேர்தல் அறிக்கையில் அறிவித்தார்கள். 43 மாத திமுக ஆட்சியில் வெறும் 113 நாட்கள் தான் சட்டமன்ற கூட்டத்தொடரை நடத்தியிருக்கிறார்கள். திமுகவுக்கு பயம் வந்துவிட்டது. அவர்களுக்கு எப்போது பயம் வந்ததோ அப்போதே அதிமுக வெற்றி பெற்றுவிட்டது. அதனால் தான் திமுக தடுமாறிக்கொண்டிருக்கிறது.
வரும் ஜனவரி மாதத்தின் இறுதி முதல் தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். 2026-ஆம் ஆண்டு நமக்கு ஒரு பொற்காலம் காத்துக்கொண்டிருந்தது. நிச்சயமாக அதிமுக ஆட்சி அமையும்.
நிச்சயமாக, உறுதியாக அனைவரும் எதிர்பார்க்கும் கூட்டணி அமையும். இப்படித் தான் நாடாளுமன்ற தேர்தலிலும் பொதுச்செயலாளர் கூட்டணி குறித்து சொன்னார் என்று நீங்கள் நினைக்கக்கூடும்.
நாடாளுமன்ற தேர்தல் வேறு, சட்டமன்ற தேர்தல் வேறு. இது நம்முடைய தேர்தல். அதிமுக தலைமையில் பிரம்மாண்டமான கூட்டணி அமையும். 2026 சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று அதிமுக கூட்டணி ஆட்சியை கைப்பற்றும்” என்று தெரிவித்தார்.
இயக்குநர் மணிகண்டனை கட்டி தழுவிய மிஷ்கின்
அண்ணா பல்கலை பெயர் மாற்றப்படுகிறதா?