இந்தியா
ADMK | “அத்தனை பேரும் எதிர்பார்க்கின்ற கூட்டணி அமையும்” – அதிமுக பொதுக்குழுவில் ஈபிஎஸ் பேச்சு!

ADMK | “அத்தனை பேரும் எதிர்பார்க்கின்ற கூட்டணி அமையும்” – அதிமுக பொதுக்குழுவில் ஈபிஎஸ் பேச்சு!
அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் அரங்கில், இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில், கட்சியின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில், 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர்ந்து பேசிய அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, “அதிமுக மக்கள் செல்வாக்கு கொண்ட இயக்கம் என்பது இப்போதும் நாம் நிரூபித்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஒற்றுமை என்பது மிகப்பெரிய பலம், யானைக்கு பலம் தும்பிக்கை நமக்கு பலம் நம்பிக்கை. எந்த ஒரு மனிதனுக்கும் நம்பிக்கை இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும், அதுதான் தனிப்பட்ட வாழ்க்கையாக இருந்தாலும் சரி அரசியல் வாழ்க்கையாக இருந்தாலும் சரி. நம்பிக்கை என்பது மிகப்பெரிய ஆயுதம் அந்த நம்பிக்கை இருந்தால், நிச்சயம் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் வெற்றி பெறலாம். அதை நாம் உணர வேண்டும்.
மாவட்டங்களில் அவர்கள் ஊர்களில் அது சார்ந்த பிரச்சனைகளில் ஆர்ப்பாட்டம் உண்ணாவிரத போராட்டங்களை மக்களை திரட்டி மேற்கொள்ள வேண்டும். அதிமுக ஆட்சியில் இருக்கும்போது எத்தனையோ பிரச்சனைகள் வந்தது. அதை எல்லாம் சமாளித்து தீர்வு கண்டோம். காவிரி நதி நீர் பிரச்சனை, ஆனால் அதை நாம் முடித்து காட்டினோம். டெல்டா மாவட்ட விவசாயிகளுக்காக டெல்டாவை பாதுகாப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட அற்புதமான ஒரு நிலையை கொண்டு வந்தது அதிமுக அரசு.
ஆட்சி பொறுப்பேற்ற போது குடிப்பது கூட தண்ணீர் கிடையாது. ரயிலில் தண்ணீர் கொண்டு வந்து மக்களை காப்பாற்றிய அரசாங்கம் அதிமுக. அதிமுக ஆட்சியில் இருந்தபோது வந்த புயல்கள் போல், எந்த ஆட்சியிலும் வரவில்லை. ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது வர்தா, தானே புயல் வந்தது. பின்னர் கஜா புயல் வந்து, டெல்டா மாவட்டத்தை புரட்டி போட்டது. அதை அனைத்தையும் சீர் செய்தோம். இயல்பு நிலைக்கு அந்த மக்களை கொண்டு வந்த அரசாங்கம் அதிமுக.
2011- 21 சிறப்பான ஆட்சியைக் கொடுத்தோம். 2021 கடைசியில் தமிழ்நாட்டினுடைய 5 கோடி லட்சத்து 18 ஆயிரம் கோடி. அரசுக்கு வருமானம் இல்லாத நிலை. கொரோனா தாக்கம் காரணமாக தொழிற்சாலைகள் எல்லாம் முடங்கிப் போனது. அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. எனினும், கொரோனா தாக்கத்துக்கு அரசு 40 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்தது.
ஆனால் இன்று 43 மாதத்தில், எந்த பெரிய திட்டத்தை யாரும் கொண்டு வந்தார்களா? ஒன்றுமே கிடையாது. ஆனால் இவர்கள் மட்டுமே 3.90 லட்சம் கடன் வாங்கியுள்ளார்கள். தமிழகத்தின் நிதி நிலைமையை அதள பாதாளத்திற்கு கொண்டு சென்றுவிட்டார்கள்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கார் பந்தயம் நடத்தினார்கள். பல நூறு கோடி ரூபாய் செலவு செய்து கார் பந்தயம் நடத்தினார்கள். கார் பந்தயம் தேவையா? பணக்காரர்களுக்கான அரசு, ஏழைகளை மதிக்க தெரியாத அரசு திமுக அரசு.
கார் பந்தயம் நடத்த வேண்டும் என்றால் சென்னை அடுத்த இருங்காட்டு கோட்டையில் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அதற்கான தடம் அங்கே அமைக்கப்பட்டுள்ளது. அங்கே நடத்தியிருக்கலாம்.
“200 தொகுதிகளில் வெற்றி என்கிற திமுக கனவு நனவாகாது. இறுமாப்போடு பேசுகிறார் ஸ்டாலினும் உதயநிதி ஸ்டாலினும், அடுத்து வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 200 இடங்களில் வெற்றி பெறும் என்று சொன்னார். நீங்கள் பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறீர்கள். கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம் அந்த கதையாக தான் இருக்கிறது. உங்கள் கனவு ஒருபோதும் நிறைவேறாது.
அதிமுகவுக்கு எழுச்சி பிறந்து விட்டது. அதுவே எங்களுக்கு வெற்றி. ஆட்சி அதிகாரம் இல்லாமல் பிரதமர் வேட்பாளரை அறிவிக்காமல் 20 சதவீதத்துக்கும் அதிமான வாக்குகளை பெற்றோம். திமுக கூட்டணி மக்கள் பிரச்சினையை கண்டுகொள்ளவில்லை. அதிமுகவை பார்த்து திமுகவுக்கு பயம் வந்துவிட்டது. பாஜக வளர்ந்துவிட்டதாக தவறான தகவல் பரவுகிறது.
அதிமுக தலைமையில் மக்கள் விரும்பும் கூட்டணி அமையும்; உறுதியாக, அத்தனை பேரும் எதிர்பார்க்கின்ற கூட்டணி அமையும். அதிமுக கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் 2026ல் வெல்லும். நீங்கள் அத்தனை பேரும் எதிர்பார்க்கின்ற கூட்டணி அமையும். கூட்டணி என்பது வரும்போகும். ஆனால் அதிமுகவின் கொள்கை நிலையானது. நான் உங்களுக்காக இரவு பகல் பாராமல் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். உங்களுக்காக நான் துணை இருப்பேன். மக்களவைத் தேர்தல் வேறு சட்டப்பேரவை தேர்தல் வேறு” என்று தெரிவித்தார்.