இந்தியா
“திமுகவை வீழ்த்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” – அண்ணாமலையைச் சந்தித்த பின் நடிகை கஸ்தூரி கருத்து

“திமுகவை வீழ்த்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” – அண்ணாமலையைச் சந்தித்த பின் நடிகை கஸ்தூரி கருத்து
சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக மாநில அலுவலகமான கமலாலயத்தில் நடிகை கஸ்தூரி பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை நேரில் சந்தித்துப் பேசினார்.
சந்திப்பு முடிந்து வெளியே வந்த கஸ்தூரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “இன்று முதல்முறையாக கமலாலய வாசலில் அடி எடுத்து வைத்துள்ளேன். நவம்பர் மாதம் நடந்த சர்ச்சையின் போது அண்ணாமலை லண்டனில் இருந்தார். அப்பொழுது அவரைத் தொடர்பு கொண்டு பேசினேன். தற்போது அவர் எனக்கு நிறைய தைரியம் கொடுத்து அறிவுரை கூறினார். என்னெல்லாம் செய்ய வேண்டும் என்பதையும் கூறினார். அவர் எப்பொழுதும் எனக்குப் பக்க பலமாக இருந்திருக்கிறார்.
எனக்கு நடந்த சோகமான காலகட்டத்தில் பக்கபலமாக இருந்ததற்காகவும் லண்டனில் இருந்து வந்து அவரை வரவேற்கும் வகையிலும் நன்றி தெரிவிப்பதற்காக வருகை தந்தேன்.
இரண்டு பேரும் முக்கியமான விஷயங்களை விவாதித்தோம். அந்த விவாதம் இன்னும் முற்றுப் பெறவில்லை. முழுமையாக விவாதித்து முடித்த பிறகு நீங்கள் எதிர்பார்க்கும் அளவிலான செய்தியைச் சொல்வோம்.
திமுகவின் ஆட்சியை அகற்றிப் புதிய காற்று தமிழகத்தில் வீச வேண்டுமானால் அதற்கு எல்லோரும் ஒன்றிணைந்து ஒருமித்த கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்பது என் கருத்து.
தற்போது என் வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் நடந்துள்ளது. அதைப்பற்றித் தான் பேசினோம். கொஞ்சம் அரசியலையும் பேசியுள்ளோம். முழு அரசியலையும் பேசி முடித்துவிட்டுத் தெரிவிக்கிறோம்” என்று தெரிவித்தார்.