இந்தியா
“திருமாவளவனுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை” – அமைச்சர் ஏ.வ.வேலு விளக்கம்!

“திருமாவளவனுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை” – அமைச்சர் ஏ.வ.வேலு விளக்கம்!
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் திமுக குறித்து பேசியது சர்ச்சையாக, கட்சியில் இருந்து 6 மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று திடீரென விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து நிரந்தரமாக விலகுவதாக அறிவித்தார். விலகுவதற்கு முன்னதாக பேட்டியளித்த ஆதவ் அர்ஜுனா, தான் சஸ்பெண்ட் செய்யப்பட்டதன் பின்னணியில் திமுக இருப்பதாகவும், திமுக அமைச்சர் ஏ.வ.வேலு தான் திருமாவளவனுக்கு அழுத்தம் கொடுத்ததாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டை திருமாவளவன் மறுத்தார். அதுதொடர்பாக பேசிய திருமாவளவன், “அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க கூடாது என்று எனக்கு யாரும் அழுத்தம் தரவில்லை. எந்த அழுத்தத்தாலும் என்னை இணங்க வைக்க முடியாது. நான் அது சுதந்திரமாக எடுத்த முடிவுதான்.” என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது அமைச்சர் ஏ.வ.வேலு விளக்கம் அளித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஏ.வ.வேலு, “விஜய் பங்கேற்ற புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவன் பங்கேற்க கூடாது என நான் திருமாவளவனுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. 2001 ஆம் ஆண்டு முதல் திருமாவளவன் உடன் பழகி வருகிறேன்.
திருமாவளவன் அரசியலில் ஒரு அறிவாளி, தொலைநோக்கு பார்வை உடையவர். நானோ, திமுகவோ திருமாவளவனுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை” என்று கூறினார்.