இந்தியா
“பிராமணர்களாய் இருந்தாலும் கருவறைக்குள் செல்ல முடியாது” – இளையராஜா விவகாரத்தில் கஸ்தூரி கருத்து

“பிராமணர்களாய் இருந்தாலும் கருவறைக்குள் செல்ல முடியாது” – இளையராஜா விவகாரத்தில் கஸ்தூரி கருத்து
இளையராஜா இசையமைத்து வெளியான “திவ்ய பாசுரம்” நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நேற்றிரவு நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக மாநிலங்களவை உறுப்பினரும், இசையமைப்பாளருமான இளையராஜா வருகை தந்தார். அவரை கோயில் நிர்வாகத்தினர் வரவேற்றனர்.
கடவுளைத் தவிர மனிதர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் எந்த ஒரு மரியாதையும் அளித்து அழைத்து வரக்கூடாது என்று அரசு தெரிவித்துள்ள நிலையில், இளையராஜா, ஆண்டாள் கோயிலில் உள்ள மணவாள மாமுனிகள் மடத்தின் சடகோப ராமானுஜ ஜீயர் ஆகியோருக்கு மேள தாளங்கள் முழங்க கோயில் யானையை அழைத்து வந்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து இளையராஜா ஆண்டாள் ரெங்மன்னாரை தரிசனம் செய்ய அர்த்த மண்டபத்திற்குள் செல்ல முயன்றார். அப்போது அருகே இருந்த ஜீயர் மற்றும் பட்டர்கள் இளையராஜாவை அர்த்த மண்டபத்திற்கு வெளியே நிற்குமாறு கூறினர்.
அதைத் தொடர்ந்து அர்த்த மண்டப நுழைவு வாயிலில் வைத்து இளையராஜாவிற்கு மரியாதை அளித்தனர். அதன்பின் இளையராஜா வெளியே வந்து நின்று சாமி தரிசனம் செய்தார். மேலும் “திவ்ய பாசுரம்” நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியையும் கண்டு ரசித்தார்.
இதற்கிடையே, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அர்த்தமண்டபத்திற்குள் செல்ல முயன்ற இசையமைப்பாளர் இளையராஜாவை வெளியே அனுப்பியதாக சர்ச்சை எழுந்த நிலையில் இது தொடர்பாக கோயில் நிர்வாகத்திடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்கப்பட்டது.
அப்போது, ஆண்டாள் கோயிலில் கருவறைக்கு முன்பு உள்ள அர்த்த மண்டபத்தையும் கருவறை போன்றே பாவித்து வருவதாகத் தெரிவித்தனர். அர்த்த மண்டபத்திற்குள் ஜீயர்களைத் தவிர பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை என்றும் சம்பவத்தன்று ஜீயருடன் இளையராஜாவும் அர்த்த மண்டபத்திற்குள் தவறுதலாக நுழைந்ததாகவும் தெரிவித்தனர்.
கோயில் நிர்வாகம் தரப்பில் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இளையராஜா வெளியே சென்றதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இளையராஜாவிற்கு கோயில் யானையை வைத்தோ வெண்குடை பிடித்தோ வரவேற்பு அளிக்கப்படவில்லை என்றும் ஆண்டாள் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தற்போது பெரும் அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்நிலையில் இன்று, தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலையை நடிகை கஸ்தூரி சந்தித்துப் பேசினார். பின்னர் வெளியே வந்து செய்தியாளர்களைச் சந்தித்த கஸ்தூரி, “இளையராஜா என்பவர் ஒரு இசை கடவுள். அவரை கோயிலுக்குள் விடவில்லை என்று வரும் சர்ச்சையை வன்மையாக கண்டிக்கிறேன். இப்படிப்பட்ட பிரச்சாரங்களை வைத்து இன்னும் எவ்வளவு நாட்கள் தான் இந்த நாட்டில் ஏமாற்றுவார்கள்.
கருவறைக்குள் எந்த ஜாதியினரும் செல்ல முடியாது. பிராமணர்களாய் இருந்தாலும் கருவறைக்குள் செல்ல முடியாது. கருவறைக்குள் அர்ச்சகர்கள் மட்டும்தான் செல்ல முடியும். தமிழகத்தைப் பொறுத்தவரை அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம். அர்ச்சகர்கள் எந்த ஜாதினராக இருந்தாலும் கருவறைக்குள் செல்ல முடியும். இதைத் திரித்துப் பேசுகிறார்கள். இளையராஜா கருவறைக்குள் செல்ல முயற்சி செய்யவே இல்லை. உங்களுக்கு மரியாதை செய்ய வேண்டும் இங்கே நில்லுங்கள் என்று சொல்கிறார்கள். அவரும் அங்கே நிற்கிறார். இதுதான் நடந்தது” என்று தெரிவித்தார்.