இந்தியா
“இளையராஜாவை தடுத்தவர்கள் மீது அரசு சட்ட நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்” – ரவிக்குமார் எம்.பி.

“இளையராஜாவை தடுத்தவர்கள் மீது அரசு சட்ட நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்” – ரவிக்குமார் எம்.பி.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் அர்த்த மண்டபத்துக்குள் அர்ச்சகர், பரிசாரகர் மற்றும் மடாதிபதிகள் தவிர வேறு யாரையும் அனுமதிக்கும் வழக்கமில்லை என்று கோயில் செயல் அலுவலர் விளக்கம் அளித்துள்ள நிலையில், தன்னை மையமாக வைத்து சிலர் வதந்தியை பரப்புவதாக இளையராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் சொல்லதிகாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய விசிக எம்.பி. ரவிக்குமார், “1971ல் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் எனும் சட்டம் நிறைவேற்றியபோது, அது உச்சநீதிமன்றத்திற்கு சென்றது. அப்போது தலைமை நீதிபதி சிக்ரி தலைமையிலான ஐந்து பேர் கொண்ட அமர்வு, அர்ச்சகர் என்பவர், நியமிக்கப்படும் அலுவலர் தான் எனவே அதில் பிறப்பை அடிப்படையாகக் கருதமுடியாது என்று தீர்ப்பு வழங்கியது.
பிறகு 2006ல் மீண்டும் கலைஞர் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதைக் கொண்டுவந்தபோது, மீண்டும் உச்சநீதிமன்றத்திற்கு வழக்கு சென்றது. அப்போது தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாய் மற்றும் பி.வி.ரமணா அடங்கிய இரண்டு பேர் அமர்வு, அனைவரும் சமம் எனும் சட்டப்பிரிவு 14க்கு முரணாக இல்லாதவரை அனுமதிக்கலாம் என்று தீர்ப்பு வழங்கினார்கள்.
அர்த்த மண்டபத்தில் உற்சவ மூர்த்திகள் வைக்கப்பட்டிருப்பதால், அங்கு அனுமதிக்கமாட்டோம் என்றால், எந்தக் கோயிலில் உற்சவ மூர்த்தி இருக்கும் இடத்தில் அனுமதி மறுக்கப்படுகிறது.
இப்படி இருக்கும்போது இந்தக் கோயிலில் மட்டும் இப்படி நடக்கிறது என்றால், உச்சநீதிமன்றமோ அல்லது உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியைவிட உயர்வானவர்கள் அந்த கோயிலில் இருக்கிறார்களா? அல்லது உச்சநீதிமன்றத்திற்கு அப்பாற்பட்டதா, அரசியல் அமைப்புச் சட்டம் செல்லுபடியாகதா இடமா இந்தக் கோயிலின் அர்த்த மண்டபம்.
அரசியலமைப்புச் சட்டத்தின் 75ம் ஆண்டு கொண்டாடிக் கொண்டிருக்கும்போது இது அரசியலமைப்புச் சட்டத்தையே இழிவு செய்யும் வேலை இல்லையா இது. இன்னமும் இதனை அவர்கள் செய்யமுடியும் என்றால், அவர்கள் எந்த நாட்டின் அதிகாரித்தின் கீழ் இருக்கிறார்கள்.
சட்டப்படி அவரைத் தடுத்தவர்கள் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இது பொதுவெளியில் வந்தபிறகு சம்பந்தப்பட்டவர் புகார் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் கூட கிடையாது” என்றார்.
அப்போது நெறியாளர் கார்த்திகைச் செல்வன், “இந்து சமய அறநிலையத்துறை அதிகாரியும், இந்த மூன்று பிரிவினருக்குத் தான் அனுமதி இருக்கிறது. அதுதான் இந்தக் கோயிலின் நடைமுறை என்று சொல்லியுள்ளார்” என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த எம்.பி. ரவிக்குமார், “அந்த அதிகாரி இந்து அறநிலையத்துறை சட்டத்தைப் படிக்க வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணாக இந்து அறநிலையத்துறைச் சட்டம் இருக்கிறது என்று சொல்வாரா? சட்டப்பிரிவு 14க்கு முரணாக எந்தச் சட்டத்தையும் பின்பற்ற முடியாது. இந்து சமய அறநிலையத் துறைக்குக் கீழ் இருக்கும் கோயிலில் ஒருவர் அவமதிக்கப்பட்டால் அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. அரசு இதுபோன்ற விஷயங்களைப் பார்த்துக் கொண்டு மௌனமாக இருப்பது ஆபத்தானது.