இந்தியா
“உலக அரங்கில் செஸ் விளையாட்டிற்கு சிறந்த இடம் சென்னை” – உலக செஸ் சாம்பியன் குகேஷ் பெருமிதம்

“உலக அரங்கில் செஸ் விளையாட்டிற்கு சிறந்த இடம் சென்னை” – உலக செஸ் சாம்பியன் குகேஷ் பெருமிதம்
சிங்கப்பூரில் உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் வெற்றி பெற்று சாதனை படைத்த குகேஷுக்கு, தமிழ்நாடு அரசு சார்பில் இன்று (17ம் தேதி) பாராட்டு விழா நடைபெற்றது. இதற்காக வாலாஜா சாலையில் இருந்து நிகழ்ச்சி நடைபெற்ற கலைவாணர் அரங்கம் வரை குகேஷ் திறந்தவெளி வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டார். மேள தாளத்துடன் அவருக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.
வழி நெடுகிலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் தேசியக் கொடியுடன் குகேஷை உற்சாகமாக வரவேற்றனர். பிறகு கலைவாணர் அரங்கில் அவருக்கான பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் செஸ் உலக சாம்பியன்ஷிப் வென்ற விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குகேஷுக்கு ரூ. 5 கோடி பரிசுக்கான காசோலையை வழங்கினார்.
இந்தப் பாராட்டு விழாவில் பேசிய உலக செஸ் சாம்பியன் குகேஷ், “உலக அரங்கில் செஸ் விளையாட்டிற்கு சிறந்த இடம் சென்னை தான். எனது சிறு வயது கனவு நினைவாகி உள்ளது. சென்னை கிராண்ட் மாஸ்டர் தொடரை தமிழ்நாடு அரசு நடத்தாவிடில், என்னால் சாம்பியன் பட்டம் வென்றிருக்க முடியாது. தமிழ்நாடு அரசு பொருளாதார ரீதியிலும் எனக்கு நிறைய உதவிகளை செய்தது. அதற்கு நன்றி” என்று தெரிவித்தார்.
இந்த விழாவில் பங்கேற்ற மாணவ, மாணவிகள், இளம் வயதிலேயே சாதனை படைத்த குகேஷ் தங்களுக்கு முன்னுதாரணமாக இருப்பதாகத் தெரிவித்தனர்.