இந்தியா
“யார் காலிலும் விழ வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது” – டி.டி.வி. தினகரன் கருத்துக்கு ஜெயக்குமார் பதில்

“யார் காலிலும் விழ வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது” – டி.டி.வி. தினகரன் கருத்துக்கு ஜெயக்குமார் பதில்
அதிமுக அழியாமலிருக்க அந்தக் கட்சி, பாஜக கூட்டணியில் இணைய வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்திருந்த கருத்துக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார்.
மதுரையில் நேற்று (17ம் தேதி) அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “திமுகவை வீழ்த்த நினைக்கும் எந்தக் கட்சியும் பாஜக தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணிக்கு வரலாம். அதிமுக அழியாமலிருக்க அந்தக் கட்சி, பாஜக கூட்டணியில் இணைய வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், “பாஜக அல்லாத மற்ற எந்தக் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் என்பதை கட்சியும், பொதுச்செயலாளரும் முடிவு செய்வார்கள். பாஜகவை பொறுத்தவரை அவர்களுடன் கூட்டணி நேற்றும், இன்றும், நாளையும் இல்லை என்பதை பொதுச்செயலாளர் தெளிவுபடுத்தியுள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை பலமுறை எங்கள் பொதுச்செயலாளர் கூறிவிட்டார். டி.டி.வி. தினகரன் தன் மீதான வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்பதற்காக இன்று பாஜகவிடம் சரணடைந்துள்ளார்.
அதிமுக என்பது தன்மானத்தோடு இயங்கும் இயக்கம். யார் காலிலும் விழ வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது. கட்சியின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் பொதுச்செயலாளர் முடிவு எடுத்துள்ளார். அந்த முடிவுதான் தொடரும், அதில் எந்த மாற்றமும் இருக்காது” என்று தெரிவித்தார்.