இந்தியா
கல்வெட்டில் உள்ள எழுத்து இப்படி தான் கண்டுபிடிக்கிறாங்களா..? படியெடுக்கும் பயிற்சியில் மாணவர்கள்…

கல்வெட்டில் உள்ள எழுத்து இப்படி தான் கண்டுபிடிக்கிறாங்களா..? படியெடுக்கும் பயிற்சியில் மாணவர்கள்…
படியெடுக்கும் பயிற்சி – ஆர்வத்துடன் கற்றுக்கொண்ட கல்லூரி மாணவர்கள்..
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை மாணவர்களுக்கு தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பில் தொல்லியல் தடயங்கள், கள்ளிக்கோட்டை கோவில் கல்வெட்டுகளை பேப்பரில் படியெடுத்தபின் எளிதாக படிக்க கற்றுக் கொடுக்கப்பட்டது.
இந்த கல்லூரி மாணவர்களுக்கு வரலாற்று துறை மாணவ, மாணவிகளுக்கு இரண்டு நாட்கள் தொல்லியல் தடயங்கள் மற்றும் கல்வெட்டு படியெடுக்கும் பயிற்சியானது நடைபெற்றது. இதில் மாவட்ட தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களின் ஒருங்கிணைப்பாளர் ராஜகுரு கலந்து கொண்டு பயிற்சி அளித்தார். முதல் நாள் பயிற்சியில் ராமநாதபுரம் மாவட்ட தொல்லியல் தடயங்கள் குறித்த படங்களுடன் விளக்கப்பட்டதுடன் தமிழி கல்வெட்டுகள் பயிற்சியில் தமிழி எழுத்துகளை எழுதவும், படிக்கவும் பயிற்சி அளிக்கப்பட்டது.
இரண்டாம் நாளில் களப்பயணமாக ராமநாதபுரம் ராமலிங்கவிலாசம் அரண்மனை ஓவியங்களை பார்வையிட்டனர். பின்பு கள்ளிக்கோட்டை கோவிலில் கல்வெட்டுகளை படியெடுத்து படிக்கும் முறைகளை மாணவர்களுக்கு விளக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.
கல்வெட்டை சுத்தம் செய்து, மேப்லித்தோ பேப்பரை தண்ணீரில் நனைத்து அதன்மீது ஒட்டி, பள்ளமான எழுத்துகளில் பேப்பர் பதியுமாறு, பிரஷால் அடித்து, விலங்கு தோலில் செய்த திண்டில் கருப்பு மை தடவி, பேப்பர் மேல் ஒத்தி எடுத்ததும், கல்வெட்டை எளிதாக படிக்கவும், பள்ளமான கல்வெட்டு எழுத்துகளில் அரிசி மாவு தடவி படிக்கும் முறையையும் ஆர்வமுடன் மாணவர்கள் கற்றுக் கொண்டனர்.