இந்தியா
தமிழ்நாட்டை அச்சுறுத்தும் கேரளா கழிவுகள்; அகற்றும் செலவை ஏற்பது யார்?

தமிழ்நாட்டை அச்சுறுத்தும் கேரளா கழிவுகள்; அகற்றும் செலவை ஏற்பது யார்?
நெல்லை மாவட்டம், நடுக்கலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொட்டப்படும் கேரள மாநில மருத்துவக் கழிவுகளை அகற்ற ஒரு லாரிக்கு 15,000 ரூபாய் வரை வாடகை கேட்பதால் கழிவுகளை அள்ளுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நெல்லை மாவட்டம் நடுக்கல்லூர், பழவூர், கொண்டா நகரம் உள்ளிட்ட ஊராட்சிகளின் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள் கொண்டு வரப்பட்டு கொட்டப்பட்டுள்ளன.
இந்நிலையில், மருத்துவக் கழிவுகளை அகற்ற அப்பகுதி மக்கள் விடுத்த தொடர் கோரிக்கையை அடுத்து நடவடிக்கை எடுத்து வருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மருத்துவக் கழிவுகளை திருநெல்வேலியில் இருந்து கொண்டு செல்ல ஒரு லாரிக்கு 15,000 ரூபாய் வரை கேட்கப்படுவதாகவும், வாடகையை யார் கொடுப்பது என்பதில் நிலவும் பிரச்சினையால் கழிவுகளை அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதேநேரம், மருத்துவக் கழிவுகளை கொட்டியது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து 10 நாட்கள் கடந்த நிலையில் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அதிமுக நெல்லை மாவட்ட செயலாளர் கணேஷ் ராஜா தெரிவித்துள்ளார்.
கேரளாவில் இருந்து 200 லாரிகளில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இதனிடையே, திருநெல்வேலி மாவட்டத்தில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தில் தடய அறிவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர். கோடகநல்லூர், பழவூர், கொண்டாநகரம் ஆகிய 3 ஊராட்சிகளில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்ட நிபுணர்கள், மருத்துவக் கழிவுகள், பிளாஸ்டிக் உள்ளிட்ட தடயங்களை சேகரித்தனர்.