இந்தியா
மத்திய அரசுக்கு எதிராக கீச்சு குரலிலாவது ஈபிஎஸ் பேசுவாரா? முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

மத்திய அரசுக்கு எதிராக கீச்சு குரலிலாவது ஈபிஎஸ் பேசுவாரா? முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்
மத்திய அரசுக்கு எதிராக கீச்சு குரலிலாவது எடப்பாடி பழனிசாமி பேசுவாரா என்று கேள்வி எழுப்பியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சியில் குற்றம் செல்ல எதுவுமில்லாததால், எதிர்க்கட்சி தலைவர் பொய் சொல்லி வருவதாக விமர்சித்துள்ளார்.
ஈரோடு அருகே உள்ள சோலாரில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 951 கோடி ரூபாய் மதிப்பில் முடிவுற்ற 559 திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். மேலும், 133 கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பில், 22 புதிய வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். இதனை தொடர்ந்து, 284 கோடி ரூபாய் மதிப்பில், 50088 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கினார்.
பின்னர் பேசிய அவர், பெரியார் பிறந்த ஈரோடு மண் தான், புதிய தமிழ்நாட்டிற்கான தொடக்கம் என்று கூறினார். 3 ஆண்டுகளில் ஈரோட்டிற்கு திமுக செய்த நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பட்டியலிட்டார். திமுக ஆட்சியில் குற்றம் சொல்ல எதுவுமில்லாததால், எதிர்க்கட்சிதலைவர் பொய் புகாரை முன்வைப்பதாக முதலமைச்சர் தெரிவித்தார்.
டங்க்ஸ்டன் விவகாரத்தில் சட்டமன்றத்தில் கூறியதையே திரும்பத் திரும்ப பேசிய எடப்பாடி பழனிசாமி, மத்திய அரசுக்கு எதிராக கீச்சு குரலிலாவது பேசுவாரா என முதலமைச்சர் கேள்வி எழுப்பினார். கடந்த ஆட்சியில், தமிழ்நாட்டின் உரிமைகளை எடப்பாடி பழனிசாமி அடகு வைத்ததை மக்கள் மறக்க மாட்டார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.