இந்தியா
“கோவை பாட்ஷா செய்தது தவறு… குஜராத் கலவரத்திற்கு யார் பொறுப்பு?” – அண்ணாமலைக்கு சீமான் கேள்வி

“கோவை பாட்ஷா செய்தது தவறு… குஜராத் கலவரத்திற்கு யார் பொறுப்பு?” – அண்ணாமலைக்கு சீமான் கேள்வி
கோவையில் அல் உம்மா இயக்கத் தலைவர் பாட்ஷா இறுதி ஊர்வலத்திற்கு அனுமதி அளித்த காவல் துறையைக் கண்டித்தும், தமிழக அரசைக் கண்டித்தும் அனைத்து இந்து இயக்க கூட்டமைப்பு சார்பில் கருப்பு தின பேரணி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “சீமான், திருமாவளவன், தனியரசு போன்றவர்கள் ஓட்டு பிச்சைக்காக இருக்கின்றனர்” என்று பேசி இருந்தார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “நாங்களாவது பிச்சை எடுக்கிறோம். நீங்கள் பிச்சு எடுக்கிறீர்கள். இஸ்லாமிய மக்கள் எனக்கு இதுவரை வாக்களித்ததில்லை. இனிமேலும் வாக்களிப்பார்களா என்பது அவர்களுக்குத் தான் தெரியும். அவர்கள் 6வது கடமை திமுகவுக்கு வாக்களிப்பது என்ற முடிவில் இருக்கும் போது, இறைதூதரே வந்து திமுகவுக்கு வாக்களிக்காதீர்கள் என்று கூறினாலும், நீங்கள் இறைதூதரே இல்லை என்று என் மக்கள் சொல்வார்கள்.
ஆனால், துவக்கத்தில் இருந்து அவர்களின் சொந்த மகனாக அவர்களுக்காக நின்று சண்டை செய்வது நான் தான். காரணம், காயிதே மில்லத் மற்றும் பழனி பாபா ஆகியோர் தான் எனது முன்னத்தி ஏர். என் கடமை அவர்களுக்காகப் போராடுவது. அப்படிப் போராடும்போது நீங்கள் (அண்ணாமலை) ஓட்டு பிச்சை எடுக்கிறேன் என்று சொன்னால், இஸ்லாமியர்களை எதிர்ப்பதைத் தவிர உங்கள் கட்சிக்கோ அல்லது ஆர்.எஸ்.எஸ்.க்கோ வேறு கொள்கை இருக்கிறதா?
நானும், திருமாவும் இஸ்லாமிய மக்கள் வாக்குகளைப் பொறுக்கச் சென்றோம் என்றால், அவர் யார் வாக்குகளைப் பொறுக்கப் பேரணி நடத்தினார்.
சமூக நீதிக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. சமூக நீதி பேசும் நீங்கள் எப்படிப் பொருளாதார ரீதியில் இட ஒதுக்கீடு கொண்டுவந்தீர்கள். ஒருவர் ஏழையாக இருக்கிறார் எனும் காரணத்திற்காகவா, தெருவில் நடப்பதையும், குளத்தில் குளிப்பதையும், கோயிலுக்குள் அனுமதியும் மறுத்தீர்கள். நான் தாழ்ந்த சாதி, தொட்டால், பார்த்தால் தீட்டு என்று தானே அனுமதி மறுக்கப்பட்டது. அதன் காரணமாகத் தான் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல், அதிகாரம் என எல்லாம் பறிக்கப்பட்டது. எனவே அதன் அடிப்படையிலேயே திரும்பித் தா எனப் போராடிப் பெற்றது தான் இட ஒதுக்கீடு. இட ஒதுக்கீடு என்று கூடச் சொல்லக்கூடாது இடப் பங்கீடு, இடப் பகிர்வு என்று தான் சொல்ல வேண்டும்.
ஏழையாக இருப்பவர் ஒரு நாள் செல்வந்தராக மாறலாம். ஆனால், அப்படி மாறினாலும், அதே சாதி தான் அவர். நாட்டின் முதல் குடிமகன் ராம்நாத் கோவிந்த் கோயிலுக்குள் போகமுடிந்ததா?
பி.டி. உஷா, இளையராஜா மற்றொருவர் என மூவருக்கு எம்பி பதவி கொடுத்தீர்கள். அதில், விளையாட்டு வீராங்கனை ஒருவருக்கு எம்பி பதவி என்றும், இளையராஜாவுக்குக் கொடுக்கும்போது தலித் ஒருவருக்கு எம்பி பதவி என்று தெரிவித்தார்கள். இசை உலகில் அவ்வளவு உயரத்தில் இருப்பவருக்கே உங்களால் சாதிய அடையாளத்தைப் போக்க முடியவில்லை. பிறகு எப்படி அவர்கள் சமூக நீதி பேசுகிறார்கள். உங்களுக்கு ஜமுக்காள நீதிகூட கிடையாது.
சாதிவாரிக் கணக்கெடுப்பை பாஜகதான் எடுக்குமா அல்லது அண்ணாமலை தான் எடுக்கச் சொல்வாரா? காங்கிரஸில் ராகுல் காந்தி நேற்று தான் கட்சி ஆரம்பித்து இன்று தான் எதிர்க்கட்சியாக வந்தது போல் பேசுகிறார். பெரியார் பெயரைச் சொன்னவர்களே எடுக்கவில்லை.
பாட்ஷாவுக்கு இறுதி மரியாதை செலுத்த நான் சென்றேன். விசிக தலைவர் திருமாவளவன் வரமுடியாமல், வன்னி அரசுவை அனுப்பிவைத்தார். நாங்கள் அஞ்சலி செலுத்திவிட்டு வந்தோம். நீங்கள் (அண்ணாமலை) ஏன் அவ்வளவு நபர்களைக் கூட்டிப் போராட்டம் நடத்தினீர்கள்.
#JUSTIN இஸ்லாமியர்களை எதிர்ப்பதை தவிர
வேறு எந்த அரசியலை பாஜக செய்கிறது? – நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி#Seeman #NTK #Annamalai #BJP #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/21LkBEIYT4
பாட்ஷா குண்டுவைத்தது தவறு, 50 பேரை இறந்துவிட்டார்கள் அது தவறு. சரி குஜராத்தில், பல ஆண்டுகளாகக் கலவரம் நடத்தி ஆயிரம் கணக்கான மக்களைக் கொன்று குவித்தது யார்? அப்போது அந்த மாநிலத்தை ஆண்டுக்கொண்டிருந்த முதல்வருக்கும் உள்துறை அமைச்சருக்கும் தெரியாமலேயே அது நடந்துவிட்டதா?” என்று பேசினார்.