இந்தியா
மும்மொழிக் கொள்கையை ஏற்றால் தான் நிதியாம்… பாஜக அரசு மீது அன்பில் மகேஷ் குற்றச்சாட்டு!

மும்மொழிக் கொள்கையை ஏற்றால் தான் நிதியாம்… பாஜக அரசு மீது அன்பில் மகேஷ் குற்றச்சாட்டு!
மும்மொழிக் கொள்கையை ஏற்க மத்திய அரசு நிர்பந்திப்பதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று (டிசம்பர் 23) குற்றஞ்சாட்டியுள்ளார்.
மும்மொழி கொள்கையுடன் கூடிய புதிய கல்விக் கொள்கையை ஏற்கும்படி மத்திய பாஜக அரசு தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால் இருமொழிக் கொள்கையை பின்பற்றுவதில் தமிழக அரசு உறுதியாக இருந்து வருகிறது.
இதுதொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் மத்திய அரசு மீது பரபரப்பு குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.
…
அவர், “நாடாளுமன்றக் குழு தலைவர் கனிமொழி மற்றும் 10 எம்.பிக்களுடன் சென்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்தோம்.
அப்போது அவர், ”நீங்கள் புதிய கல்விக்கொள்கை, மும்மொழி கொள்கையை ஏற்றால், அடுத்த அரைமணி நேரத்தில் தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய நிதியை உடனடியாக விடுவிப்பதாக கூறினால் என்ன அர்த்தம்?
நாங்கள் தமிழக பள்ளிக்கல்வித்துறையின் சாதனைகளை எடுத்து அவரிடம் பேசினோம். அதற்கு அவர், “நானும் இந்தி பேசாத மாநிலமான ஒரிஷாவில் இருந்து தான் வந்துள்ளேன். நானே சொல்கிறேனே?” என்று மீண்டும் மும்மொழிக் கொள்கையை ஏற்கும்படி தான் கூறினார்.
அதற்கு நான், ”தமிழ்நாடு மாநிலத்திற்கு என்று தனி செண்டிமெண்ட் உள்ளது. பேரறிஞர் அண்ணா காலத்தில் இருந்து இருமொழிக் கொள்கையை பின்பற்றி வருகிறோம். இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் சென்று தமிழக மாணவர்கள் சாதனை படைத்து வருகின்றனர்.
இந்தியாவின் அனைத்து உயர்க்கல்வி நிறுவனங்களிலும் தமிழக மாணவர்கள் பயின்று வருகின்றனர். மேற்படிப்புக்கு தேவையான பயிற்சியையும் நாங்கள் அளித்து வருகிறோம். இதனை கருத்தில் கொண்டு தமிழகத்திற்கு வழங்கவேண்டிய கல்வி நிலுவைத்தொகையை விடுவிக்க வேண்டுமென்று கோரினோம்” என அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து தனது எக்ஸ் தள பக்கத்திலும், கல்வி மாநிலப் பட்டியலுக்கு வர வேண்டும் என அன்பில் மகேஷ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “இந்திய ஒன்றியத்திற்கு முன்மாதிரியாக கல்வியில் வளர்ச்சி அடைந்துள்ள தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நிலுவைத் தொகையை தராமல் ஒன்றிய அரசு வஞ்சித்துக் கொண்டிருக்கிறது.
பல்வேறு வகைகளிலும் கல்வியில் சாதனை புரியும் நமது மாணவச் செல்வங்களையும், ஆசிரியப் பெருமக்களையும் ஒன்றிய அரசு ஏமாற்றி வருகின்றது.
கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். எங்கள் பிள்ளைகளையும் ஆசிரியப் பெருமக்களையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். எங்கள் மாணவர்களுக்கு என்ன மாதிரியான அறிவுசார் பயிற்சிகள் வழங்க வேண்டும் என்பதை நாங்கள் முடிவு எடுத்துக் கொள்கிறோம்” என அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்,