இந்தியா
டாப் 10 நியூஸ் : எம்.ஜி.ஆர் நினைவு நாள் முதல் அல்லு அர்ஜூன் ஆஜர் வரை!

டாப் 10 நியூஸ் : எம்.ஜி.ஆர் நினைவு நாள் முதல் அல்லு அர்ஜூன் ஆஜர் வரை!
அ.தி.மு.க. நிறுவனத் தலைவரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் 37-வது ஆண்டு நினைவு நாளான இன்று (டிசம்பர் 24) காலை 10 மணிக்கு, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்த உள்ளார்.
தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு கோரி பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் விழுப்புரத்தில் இன்று போராட்டம் நடைபெற உள்ளது.
அம்பேத்கரை இழிவாகப் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா மன்னிப்புக் கேட்டு பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் காங்கிரஸ் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர்.
போதைப்பொருள் வழக்கில் சிறையில் இருக்கும் மன்சூர் அலிகான் மகனின் ஜாமீன் மனு சென்னை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
மண்டல பூஜைக்கு இன்னும் ஒருநாள் உள்ள நிலையில் சபரிமலையில் இன்று மதியம் முதல் மாலை வரை பக்தர்கள் பம்பையில் இருந்து சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். நாளை 50 ஆயிரம் பக்தர்களுக்கும், 26ம் தேதி 60 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும். இந்த இரு நாட்களிலும் உடனடி முன்பதிவு மூலம் தினமும் 5 ஆயிரம் பேர் மட்டுமே தரிசனம் செய்ய முடியும்.
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் அரையாண்டு தேர்வு நிறைவடைந்த நிலையில், இன்று தொடங்கி ஜனவரி 1ஆம் தேதி வரை 9 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மாநில அரசின் அனைத்து அலுவலகங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் இன்று உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா உத்தரவிட்டுள்ளார்.
திரையரங்க கூட்ட நெரிசலில் பெண் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் நடிகர் அல்லு அர்ஜூன் இன்று காலை 11 மணிக்கு சிக்கடப்பள்ளி காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜராக உள்ளார்.
2024ஆம் ஆண்டிற்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு செய்யப்பட்டவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தங்களின் சான்றிதழ்களை இணைய வழியில் பதிவேற்றம் செய்ய இன்றே கடைசி நாள் ஆகும்.
வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்த நிலையில், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூரில் இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.