
நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer
Published on 30/12/2024 | Edited on 30/12/2024
சென்னை, கலைவாணர் அரங்கத்தில் விடுதலை போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான தோழர் நல்லகண்ணுவின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா நேற்று(29.12.2024) நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு ‘தோழர் இரா. நல்லகண்ணு 100 நூறு கவிஞர்கள் நூறு கவிதைகள்’ என்ற நூலினை வெளியிட்டார்.
இந்த நிகழ்வில் நடிகர் விஜய்சேதுபதி கலந்து கொண்டு பேசுகையில், “விடுதலை 2 படத்தில் நடித்தது நல்லக்கண்ணு ஐயாவைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு உதவியாக இருந்தது. நல்லகண்ணு ஐயாவின் வாழ்க்கை வரலாறு பாடப் புத்தகத்தில் இடம் பெற வேண்டும்” என்று தமிழக அரசை கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் விஜய் சேதுபதி கோரிக்கைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் தற்போது பதிலளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “விடுதலைப் போராட்ட வீரர் போற்றுதலுக்குரிய நல்லகண்ணு அய்யா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பள்ளி மாணவர்கள் அறிந்து கொள்ளும் நோக்கில், அவரின் வாழ்க்கை குறிப்பை பாடப்புத்தகத்தில் இணைப்பது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையைப் பெற்று முடிவு செய்யப்படும்” எனப் பதிவிட்டுள்ளார்.
