Connect with us

இலங்கை

பொருளாதார நெருக்கடிகளை தீர்க்கும் பயணம் புத்தாண்டில்!

Published

on

Loading

பொருளாதார நெருக்கடிகளை தீர்க்கும் பயணம் புத்தாண்டில்!

அனைவரின் ஒத்துழைப்பையும் கோருகின்றார்; ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க

நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணத் தேவையான பொருளாதார நிகழ்ச்சி நிரலை இந்தப் புத்தாண்டில் நடைமுறைப்படுத்தத் தயாராக இருக்கின்றோம் என்று தெரிவித்துள்ளார் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க.

Advertisement

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற ‘தூய இலங்கை’ தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-
இந்த புத்தாண்டுடன் எமது நாட்டை புதிய மாற்றத்துக்கு உட்படுத்தும் நிரந்தரமான  நோக்கம் எமக்கு உள்ளது. அதற்கான கடமையும் பொறுப்பும் எம்மைச் சார்ந்திருக்கிறது. நானும் எனது அமைச்சர்களும் பிரதி அமைச்சர்களும் அனைத்து அரசியல் தரப்புகளும் இதற்கான அர்ப்பணிப்பை செய்வோம்.
அரசியல் கலாசாரம், வீண் விரயம், குடும்ப வாரிசுகள், எல்லையை மீறி அதிகாரத்தைப் பயன்படுத்தல், அதிகாரத்தை மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தல், மக்களுக்கு மேலாக இருக்கும் அரசியல்வாதிகளாக இருத்தல் என்ற அனைத்தையும் இல்லாமல் செய்து, மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய ஒரு புதிய அரசியல் கலாசாரத்தை நாம் ஆரம்பித்திருக்கின்றோம். புதிய வருடத்தின் சவால்களுக்கு ஈடுகொடுக்கக்கூடிய திட்டங்களை நாம் வகுத்திருக்கின்றோம்.

கடந்த காலங்களில் எமது பொருளாதாரம் வங்குரோத்து நிலையில் காணப்பட்டது. தற்போது பொருளாதாரத்தை மேலோட்டமாக பார்க்கும் போது நிலைபேறான தன்மையை உருவாக்கியிருக்கிறோம். கடந்த வருடத்தின் நடுப்பகுதியில் வங்குரோத்து நிலையிலிருந்து மீள்வதற்கான வாய்ப்பு நமக்கு கிடைத்திருந்தது. அது போதுமானதல்ல. பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகள் புதியவையாக அமைந்துள்ளன. அவற்றைத் தீர்ப்பதற்கான அரசியல் வேலைத்திட்டத்தை நாம் ஆரம்பித்திருக்கிறோம்.

Advertisement

நாட்டுக்குள் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதற்கான பலமான வேலைத்திட்டம் எமக்கு இருக்கிறது. எமது நாட்டில் நீண்ட காலமாகச் சட்டத்தின் ஆதிக்கம் கருத்தில்கொள்ளப்படாத நிலைமை காணப்பட்டது. பிரதானமாக குற்றவாளிகளும் மோசடிக்காரர்களும் சட்டத்துக்கு மேலாக இருக்கும் வகையில் அரசியல்துறை இருந்தது. தனக்கு தேவையான மற்றும் தாம் நினைத்தவாறு சட்டத்தை மீறிச் செல்லும் நிலைமை காணப்பட்டது. நாம் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தப் பெரும் முயற்சிகளை மேற்கொள்கிறோம்.

எமது நாட்டின் அரச கட்டமைப்பு, அரசியல் கட்டமைப்பு மற்றும் முழு சமூகத்துக்குள்ளும் ஊழல் மோசடி, வீண் விரயம் என்பன பரவியுள்ளன. ஊழல் மோசடியை நிறுத்த நாம் பெரும் முயற்சிகளை எடுக்க வேண்டியுள்ளது. அதற்குள் எமது நாட்டின் சட்டமா அதிபர் திணைக்களத்துக்குப் பெரும் பணி உள்ளது. தேவையான ஒத்துழைப்பை சட்டமா அதிபர் திணைக்களம் வழங்கும் என நம்புகிறேன்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களம், நீதிமன்றக் கட்டமைப்பு  என்பன மீண்டும் எமது நாட்டை ஊழல், மோசடி அற்றதாக மாற்றும் பணிக்காக தம்மை அர்ப்பணிக்கும் என்று நம்புகிறோம். அரசியல் அதிகாரத் தரப்பு என்ற வகையில் செயற்பாடுகள் வாயிலாக ஊழலை தடுக்கவும் மோசடியை தடுக்கவும் நாம் முன்மாதிரியாக செயற்படுவோம். ஆனால் அரசியல் தரப்பின் முன்னுதாரணமும் தலையீடும் மாத்திரம் போதுமானதல்ல. அதற்கான அரச நிறுவனங்கள் தம்மீதான பொறுப்புகளை சரியாக புரிந்துகொண்டு அந்த மாற்றத்திற்கு தேவையான உதவி, ஒத்துழைப்புகளை எமக்கு வழங்கவேண்டும் என்று கோருகின்றேன். 

Advertisement

எந்தவொரு வலுவான வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவும், வலுவான அடித்தளம் அவசியமாகும். எமது நாடும் தேசமும் அத்திபாரம் இழந்த நாடாகும். அடிப்படை இழந்த நாடாகும். நாம் மிகத் துரிதமாக திட்டமிடலின் அடிப்படையில் இந்த அத்திபாரத்தை கட்டியெழுப்பிக் கொண்டிருக்கிறோம்.
பொருளாதாரம் மிகச் சிறிய குழுவின் மீது குவிந்திருப்பது சமூகத்துக்குள் ஒருபோதும் ஸ்திரத்தன்மையைக் கொண்டுவராது. பொருளாதாரம் ஒரு சிறிய குழுவிடம் குவிந்திருப்பது நாட்டிலும் மக்களிடமும் நிலையற்ற தன்மையை உருவாக்கும்.

 பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மை  உருவாக வேண்டுமெனில் பொருளாதாரத்தின் பலன்கள் கிராமிய மக்கள் வரையில் சென்றடைய வேண்டும்.
எதிர்வரும் வரவு- செலவுத் திட்டத்தை நமது நாட்டில் வறுமை ஒழிப்பை நோக்கமாகக் கொண்ட திசையை நோக்கி நகர்த்தும் ஒரு பொருளாதார வேலைத்திட்டத்தின் ஆரம்பமாக மாற்றுவதற்கு  நாங்கள் தயாராக உள்ளோம். எமது இரண்டாவது இலக்கு இந்த நாட்டை டிஜிட்டல் மயமாக்குவதாகும். செயல்திறனற்ற வீண் விரயத்தைக் குறைக்கவும் ஊழல்,மோசடியை கட்டுப்படுத்தவும் பிரஜைகளுக்கு மிக இலகுவாக அரசாங்கத்துடன் இருக்கின்ற தொடர்பை தொடர்ச்சியாக பேணிக்கொள்ளவும் தேவையான அடித்தளத்தை டிஜிட்டல் மயமாக்கல் உருவாக்கும்.-என்றார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன