Connect with us

இந்தியா

தமிழகத்தில் அறிவிக்கப்படாத எமெர்ஜென்சியா? – ஸ்டாலினுக்கு பாலகிருஷ்ணன் அதிரடி கேள்வி!

Published

on

Loading

தமிழகத்தில் அறிவிக்கப்படாத எமெர்ஜென்சியா? – ஸ்டாலினுக்கு பாலகிருஷ்ணன் அதிரடி கேள்வி!

தமிழகத்தில் அறிவிக்கப்படாத ஒரு அவசர நிலையை முதல்வர் ஸ்டாலின் பிரகடப்படுத்திவிட்டாரா என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று (ஜனவரி 3) கேள்வி எழுப்பியுள்ளார்.

விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாடு இன்று (ஜனவரி 3) தொடங்கி ஜனவரி 5-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

Advertisement

இந்த மாநில மாநாட்டில் அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசும்போது, “இன்றைக்கு நாட்டில் பல அரசியல் கூத்துக்கள் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. ஒரு கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடந்த போது அந்த கட்சியின் நிறுவனர், இது நான் உருவாக்கிய கட்சி. இங்கே நான் சொல்வதை தான் எல்லோரும் கேட்க வேண்டும். அப்படி கேட்கவில்லை என்றால் அவர்கள் இந்த அரங்கத்தை விட்டு வெளியே போய்விடலாம் என்று பேசுகிறார்.

ஆனால், மார்க்சிஸ்ட் கட்சி என்பது யாரோ ஒருவருக்கு சொந்தமான கட்சி அல்ல. லட்சக்கணக்காண உழைப்பாளர்கள் தங்கள் உதிரத்தை சிந்தி வளர்த்திருக்கிற கட்சி.

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்காக கொதிக்கும் அண்ணாமலை, அதிமுக ஆட்சியின் போது பொள்ளாச்சியில் பெண்களுக்கு வன்கொடுமை நடந்ததே அப்போது அமெரிக்காவுக்கு படிக்கப் போயிருந்தாரா?

Advertisement

அதிமுகவோடு கூட்டணி பேசிக்கொண்டிருந்தார். அன்றைக்கு ஆட்சியை கலைக்க வேண்டும் என்று கோரவில்லை. பாதிக்கப்பட்ட பெண்களை பற்றி உங்களுக்கு கவலையில்லை, அரசியல் தான் முக்கியமாக இருக்கிறது. தமிழகத்தில் பாஜகவின் முயற்சிகளை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். ஆர்.எஸ்.எஸ் – பாஜகவின் முயற்சி தமிழகத்தில் ஒருபோதும் வெற்றி பெறாது.

தமிழிசை சவுந்தரராஜன் தமிழகத்தில் தாமரை மலரப்போகிறது, தாமரை மலரப்போகிறது என்று ஆராதனை செய்துகொண்டிருந்தார். ஆனால், அவர் தலைவராக இருந்த வரை தமிழகத்தில் தாமரை மலரவில்லை. அது கருகிப்போன காட்சியை தான் பார்க்க முடிந்தது. கருகிய தாமரையை அண்ணாமலை அல்ல, நீங்கள் வழிபடுகிற ஆண்டவனே வந்தால் கூட இங்கே மலரவைக்க முடியாது.

பாஜகவை வீழ்த்தக்கூடிய போராட்டத்தில் நாங்கள் திமுகவுடன் உடன் நிற்போம். தமிழகத்தில் ஆட்சியில் இருக்கிற திமுக, மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். தெருமுனை கூட்டம், ஆர்ப்பாட்டம், ஊர்வலம் என்றால் கூட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது வழக்கு போடுகிறார்கள்.

Advertisement

நான் முதல்வர் ஸ்டாலினை பார்த்து கேட்க விரும்புகிறேன், தமிழகத்தில் அறிவிக்கப்படாத ஒரு அவசர நிலையை நீங்கள் பிரகடப்படுத்திவிட்டீர்களா? காவல்துறை ஏன் இப்படி கட்டுப்பாடு இல்லாமல் செயல்படுகிறது? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாட்டின் ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. தமிழகத்தில் ஊர்வலம் நடத்தக்கூடாதா? எதிர்க்கட்சிகள் நடத்துகிற போராட்டங்களுக்கும் அனுமதி கொடுக்க வேண்டும்.

இன்றைக்கு பல்வேறு மாடல்கள் இந்தியாவில் தமிழகத்தில் முன்மொழியப்படுகிறது. இந்துத்துவா மாடலை விட இந்தியாவிற்கு சிறந்த மாடல் இடதுசாரி மாடலாக தான் இருக்க முடியும். தமிழகத்தில் திராவிட மாடல் என்கிறார்கள், அது அவர்களுடைய உரிமை. ஆனால் தமிழகத்தில் இருக்கிற மக்களுக்கு ஒரு சிறந்த மாடல் என்றால் அது இடதுசாரி மாடல் தான்.

திமுக அரசு தொழிலாளர்கள், விவசாயிகள், அரசு ஊழியர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற காலம் தாழ்த்தும்போது அந்த உரிமைகளை மீட்டெடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராட்டத்தை எதிர்காலத்தில் முன்னெடுக்கும்.

Advertisement

திமுகவுடன் நாங்கள் கூட்டணி ஆட்சியில் இல்லை. ஆட்சி எடுக்கிற எந்தவிதமான நடவடிக்கைகளுக்கும் எங்களுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. நாங்கள் எதிர்க்கட்சியில் இருக்கிறோம். பாஜகவை வீழ்த்த நினைக்கிற நாம் மக்களின் ஆதரவை இழந்துவிட்டு வீழ்த்த நினைத்தால் பாஜகவை வீழ்த்த முடியாது.

ஆணவ படுகொலையை தடுக்கிற சட்டம் இயற்றவதால் முதல்வருக்கு என்ன குறை ஏற்படப்போகிறது? அதைக்கூட நிறைவேற்ற முடியாது என்று சொன்னால் என்ன அர்த்தம். ஒருவேளை எங்களை விமர்சித்து நாளைக்கு திமுக நண்பர்கள் பேசக்கூடும். அதை சந்திப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்றார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன