இந்தியா
கல்யாணமாகி இரண்டே மாதம்… கணவருடன் விபத்தில் பலியான பெண் எஸ்.ஐ!

கல்யாணமாகி இரண்டே மாதம்… கணவருடன் விபத்தில் பலியான பெண் எஸ்.ஐ!
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் திருமணம் முடிந்து இரண்டே மாதங்களான பெண் எஸ்.ஐ கலையரசி, தனது கணவர் கலைவேந்தனுடன் விபத்தில் இன்று (ஜனவரி 5) பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரம் அருகே குமராட்சி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார் கலையரசி. இவர் 2016-ஆம் ஆண்டு பேட்ச்சை சேர்ந்தவர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக இவரும் ஜெயங்கொண்டபட்டினத்தைச் சேர்ந்த கலைவேந்தனும் திருமணம் செய்து கொண்டனர்.
இந்தநிலையில், புதுமண தம்பதிகள் இருவரும் வீரன் கோயில் திட்டு பகுதியில் தங்களது உறவினர் வளைகாப்பிற்கு TN 91Q 3159 பதிவெண் கொண்ட யமஹா FZ இருசக்கர வாகனத்தில் இன்று காலை 11.55 மணியளவில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது சித்தலைப்பாடி பகுதியில் இருசக்கர வாகனம் சென்றபோது, எதிரே வந்த TN 32 N 3399 பதிவெண் கொண்ட அரசு பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியது.
இந்த விபத்தில் உதவி ஆய்வாளர் கலையரசி மற்றும் அவரது கணவர் கலைவேந்தன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களது உடல் சிதம்பரம் காமராஜர் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விபத்து குறித்து அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணமான இரண்டே மாதத்தில் பெண் எஸ்.ஐ விபத்தில் பலியான சம்பவம் அந்த பகுதியிலும் காவல்துறை வட்டாரத்திலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.