விளையாட்டு
INDvs AUS : பார்டர் கவாஸ்கர் கோப்பையுடன்… கனவையும் தொலைத்த இந்தியா
INDvs AUS : பார்டர் கவாஸ்கர் கோப்பையுடன்… கனவையும் தொலைத்த இந்தியா
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இன்று (ஜனவரி 5) தோல்வியடைந்ததன் மூலம் 10 ஆண்டுகளாக தக்க வைத்த பார்டர் கவாஸ்கர் டிராபியை இந்திய அணி இழந்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் விளையாடி வந்தது.
ஏற்கெனவே நடந்து முடிந்த 4 போட்டிகளில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி முன்னிலை வகித்தது.
இந்த நிலையில் கடந்த 3ஆம் தேதி சிட்னி மைதானத்தில் 5வது மற்றும் கடைசி நாள் டெஸ்ட் தொடங்கியது. ஃபார்மில் இல்லாத ரோகித் சர்மாவுக்கு ஓய்வளிக்கப்பட்ட நிலையில், கேப்டன் பொறுப்பை பும்ரா ஏற்றார்.
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 185 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியும் தடுமாற முதல் இன்னிங்சில் 181 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதற்கிடையே காயம் காரணமாக பும்ரா வெளியேற, கேப்டன் பொறுப்பை ஏற்றார் விராட் கோலி.
4 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியிடம் பெரிய ஸ்கோரை ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் 157 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் மட்டும் 61 ரன்கள் குவித்த நிலையில் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இதனையடுத்து 162 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு, முதுகு வலியால் அவதிப்பட்ட பும்ரா பந்துவீச முடியாததது மேலும் சாதகமாக அமைந்தது.
எனினும் சிராஜ் மற்றும் பிரதீஷ் கிருஷ்ணா போராடினாலும், டிராவிஸ் ஹெட் மற்றும் வெப்ஸ்டரின் நங்கூர கூட்டணி வெறும் 27 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது.
இதன்காரணமாக ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்து பார்டர் கவாஸ்கர் கோப்பையை தக்க வைக்கும் வாய்ப்பை இழந்தது.
மேலும் தொடர்ந்து மூன்றாவது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் இந்திய அணி இழந்தது.
அதே வேளையில் ஆஸ்திரேலிய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை வென்று WTC இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றது.
அதேவேளையில் இந்த தொடரில் 32 விக்கெட்டுகளை கைப்பற்றி, ஆஸ்திரேலிய வீரர்களையே கலங்க வைத்த பும்ரா தொடர் நாயகன் விருதை பெற்றார்.
வரும் ஜூன் மாதம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடுவது உறுதியாகியுள்ளது.
