
நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer
Published on 24/01/2025 | Edited on 24/01/2025

திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருது, ஆண்டுதோறும் பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2025ஆம் ஆண்டிற்கான 97வது ஆஸ்கர் விருது மார்ச் 2ஆம் தேதி அமெரிக்கா லாஸ் ஏஞ்ஜல்ஸ் நகரில் நடைபெறவுள்ளது. அதற்கான தேர்வு செய்யும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது.
இதில் சிறந்த வெளிநாட்டு திரைப்படம்(Best International Feature Film) பிரிவில் பல்வேறு நாடுகளில் இருந்து படங்கள் பரிந்துரைக்கப்படுகிறது. அந்த வகையில் இந்தியாவில் இருந்து இந்தாண்டு பாலிவுட் படமான ‘லாபடா லேடீஸ்’(Laapataa Ladies) பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் இப்படம் அடுத்த சுற்றுக்கு முன்னேறவில்லை. இதனால் இந்தாண்டும் இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட படம் வழக்கம் போல் வெளியேறியுள்ளது. இந்த நிலையில் இறுதிசெய்யப்பட்ட நாமினேஷன் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் ஸ்பானிஷ் மொழி படமான ‘எமிலியா பெரெஸ்’ சிறந்த திரைப்படம், சிறந்த நடிகை, சிறந்த திரைக்கதை, சிறந்த பாடல் உள்ளிட்ட 13 பிரிவுகளில் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளது. இதில் சிறந்த நடிகைக்கான பிரிவில் கார்லா சோபியா காஸ்கான் என்ற திருநங்கை இடம்பெற்றுள்ளார். இதன் மூலம் ஆஸ்கர் விருதுக்கு முதல் முறையாக நாமினேட் செய்யப்பட்ட திருநங்கை நடிகை என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
இந்த நாமினேஷன் லிஸ்டில் இந்தியில் எடுக்கப்பட்ட ‘அனுஜா’ என்ற குறும்படம் சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படம் பிரிவில் இடம் பெற்றுள்ளது. இப்படத்தை மொத்தம் 10 பேர் தயாரித்துள்ளனர். அதில் பிரபல பாலிவுட் நடிகர் பிரியங்கா சோப்ரா, ஆஸ்கர் விருது பெற்ற குனீத் மோங்கா உள்ளிட்டோரும் இருக்கின்றனர். ஆடம் ஜே. கிரேவ்ஸ் இயக்கியுள்ள இப்படம் குழுந்தை தொழிலாளர்கள் வாழ்க்கையைப் பற்றியும் அவர்கள் படும் துயரத்தை பற்றியும் பேசுகிறது. இப்படம் 180 குறும்படங்களில் இருந்து 5 படங்கள் நாமினேஷனுக்கு தேர்வு செய்யப்பட்ட நிலையில் அதில் ஒன்றாக இடம்பெற்றுள்ளது. கடந்த 95வது ஆஸ்கர் விழாவில் குனீத் மோங்கா தயாரித்திருந்த ‘தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்’ என்ற ஆவணக் குறும்படம் விருது வென்றது நினைவுகூறத்தக்கது.