இலங்கை
இந்தியாவே இலங்கையின் நண்பர்; மூன்றாம் தரப்பு அழுத்தத்துக்கு பணிந்துவிடக்கூடாது இலங்கை!

இந்தியாவே இலங்கையின் நண்பர்; மூன்றாம் தரப்பு அழுத்தத்துக்கு பணிந்துவிடக்கூடாது இலங்கை!
குடியரசு தினச் செய்தியில் இந்தியப் பதில் தூதுவர் சூசகம்
இலங்கையின் நம்பகத்தன்மை மிக்க நண்பர் என்பதை இந்தியா மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளது. ஒப்பிட முடியாத தன்னிச்சையுடன் – மூன்றாம் தரப்பின் அழுத்தங்களால் பாதிக்கப்படாமல் நாம் ஒருவரை ஒருவர் ஆதரிக்கவேண்டும். இவ்வாறு இலங்கைக்கான இந்தியப் பதில் தூதுவர் சத்யாஞ்சல் பாண்டே தெரிவித்துள்ளார். இந்தியாவின் 76ஆவது குடியரசுத்தினச் செய்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-
நமது கதைகள் பின்னிப்பிணைந்துள்ளன. நம் எதிர்காலம் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டது. இலங்கை இந்தியாவின் ஒரு முக்கியமான பங்காளியாக உள்ளது.
இந்தியாவும் இலங்கையும் சக ஜனநாயக நாடுகள் மாத்திரமல்ல. நாங்கள் நமது பன்முகத்தன்மை மற்றும் முனைப்புடமை ஆகியவற்றையும் பகிர்ந்துகொள்கின்றோம். நாங்கள் நாகரிகம் மிக்க சகாக்கள். எங்கள் வரலாறு, மொழி, மதம், நெறிமுறைகளை தொடர்ந்தும் பகிர்ந்துகொள்கின்றோம்.
எங்கள் புவியியல் ரீதியிலான நெருக்கம் எங்களை இயற்கையான பங்காளிகளாக மாற்றியுள்ளது. அதேவேளை அருகில் இருப்பதால் இரு நாடுகளும் பரஸ்பரம் ஏனைய நாட்டின் நலன்கள் குறித்த உணர்வை கொண்டிருப்பது அவசியமாகிறது. இயற்கை பேரிடர்களாக இருக்கலாம், கடலில் ஏற்படும் விபத்துக்களாக இருக்கலாம், கொவிட் பெருந்தொற்றாக இருக்கலாம் அல்லது சமீபத்தைய பொருளாதார நெருக்கடியாக இருக்கலாம், எதுவாக இருந்தாலும், இந்தியா முதலாவது நாடாக இலங்கைக்கு உதவ விரைந்து முன்வந்துள்ளது. எங்கள் ஆதரவு உரிய தருணத்தில் விரைவானதாக நிபந்தனையற்றதாக காணப்பட்டுள்ளது-என்றார்.