இலங்கை
புதிய அரசியல் கலாசாரம் பழிவாங்கும் செயல் அல்ல
புதிய அரசியல் கலாசாரம் பழிவாங்கும் செயல் அல்ல
மஹிந்த வீட்டு விவகாரத்துக்கு ஜனாதிபதி அநுர விளக்கம்
புதியதொரு அரசியல் கலாசாரத்தையே நாம் ஏற்படுத்திவருகின்றோம். இதற்கு பெயர் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை அல்ல. அதேபோல மக்களின் கோடிக்கணக்கான பணத்தை வீணடித்து சொகுசு வாழ்க்கை வாழவேண்டும் என்பது முன்னாள் ஜனாதிபதிகளுக்கான உரிமை கிடையாது.
இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தமக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ள விவகாரம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சட்டப் போராட்டத்தைக் கையிலெடுத்துள்ள நிலையிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அநுராதபுரத்தில் நேற்றுக் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது-
அமைச்சர்களுக்கு அரச வதிவிடம் வழங்கப்படமாட்டாது. மின்சார கட்டணம், குடிநீர் கட்டணம் என்பவற்றையெல்லாம் அமைச்சர்களே செலுத்திக்கொள்ள வேண்டும். அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படமாட்டாது. அமைச்சர்கள் சாதாரணமாகப் பயணிக்கின்றனர். எனக்கு மட்டுமே மூன்று வாகனங்கள் உள்ளன.
மக்களுக்கு சுமையை ஏற்படுத்திவிட்டு அரசியல்வாதிகள் சொகுசு வாழ்க்கை வாழவேண்டியதில்லை. அமைச்சர்களுக்கு இவ்வாறு குறைப்பு செய்துவிட்டு முன்னாள் ஜனாதிபதிகளுக்குரியை சலுகைகள் சிலவற்றை குறைக்க முற்பட்டால் அது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை எனக் கூறுகின்றனர். இது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை அல்ல. மக்கள் எதிர்பார்க்கும் சாதாரண அரசியல் கலாசாரத்தை நோக்கிய பயணமாகும்.
கொழும்பு 7, விஜேராம மாவத்தையில் இருவர் வாழ்வதற்கு ஒரு ஏக்கர் 10 பேர்ச்சுடன் வீடு எதற்கு? ஒரு மாடிதான் உள்ளது, ஆனால் மின் தூக்கி அமைக்கப்பட்டுள்ளது? இப்படி மக்கள் பணத்தை வீணடிக்க வேண்டுமா? பழைய அரசியல் கலாசாரத்தை கைவிடுங்கள். சாதாரண வாழ்க்கைக்கு வாருங்கள்.
மக்களின் கோடிக்கணக்கான பணத்தை செலவு செய்து, வீணடித்து சொகுசுவாழ்க்கை வாழ்வது தமது உரிமையென அவர்கள் கருதுகின்றனர். அந்த உரிமை மறுக்கப்பட்டால் வழக்கு தொடுக்கப்படுமாம். சாதாரண வாழ்க்கைக்கு வாருங்கள் என அழைக்கின்றேன்-என்றார்.